/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் ரெத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ரெத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ரெத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ரெத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : செப் 15, 2025 01:26 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காகம் பறவாமலை, ஐவர்மலை, வாட் போக்கி மலை என பல்வேறு சிறப்பு பெயர்கள் கொண்ட, 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில், கடந்த ஓராண்டுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டது. மலை உச்சியில் உள்ள கோவிலில், தற்போது திருப்பணி நடந்து வரும் நிலையில், அடிவாரத்தில் உள்ள விநாயகர், தண்டபாணி, விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர், வைரப்பெருமாள், கருப்பணசாமி
உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக, நேற்று காலை இரண்டாம் கால யாகவேள்வி பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள், புனித நீர் கலசத்தை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின், வேதமந்திரம் முழங்க கலசத்திற்கு புனிதநீர் ஊற்றினர். கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்த பின், மூலவர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், திருப்பூர் மண்டல இணை ஆணையர் ரெத்தினவேலு பாண்டியன், முன்னாள் அரங்காவலர் குழு தலைவர் முருககணபதி, மாவட்ட அறங்காவலர் காந்திராஜன், செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.