Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 29,771 மருத்துவ காலி பணியிடம் நிரப்பல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு

29,771 மருத்துவ காலி பணியிடம் நிரப்பல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு

29,771 மருத்துவ காலி பணியிடம் நிரப்பல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு

29,771 மருத்துவ காலி பணியிடம் நிரப்பல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு

ADDED : ஜூன் 11, 2025 01:50 AM


Google News
கரூர், ''இதுவரை, 29,771 மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், 143 மாணவ, மாணவியருக்கு, பட்டங்களை வழங்கி பேசியதாவது:

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம், 2.27 கோடி பேர் பயனடைந்துள்ளனர். அதில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதை பாராட்டி, ஐ.நா. அமைப்பு விருது வழங்கி உள்ளது. புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு, பரிசோதனை செய்யும் திட்டம் ஈரோடு, திருப்பத்துார், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, 27 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, கரூர் உள்பட 12 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ துறையில் பணி நியமனம், பணியிட மாறுதல் ஆகியவை வெளிப்படை தன்மையோடு நடக்கிறது. எம்.ஆர்.பி.,- டி.என்.பி.எஸ்.சி., - என்.எச்.எம்., போன்ற அமைப்புகள் சார்பில், இதுவரை, 29,771 மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எம்.ஆர்.பி. மூலம், 48 பல் டாக்டர் பணியிடம் நிரப்பும் பணி நடக்கிறது. இதற்கான தேர்வில், 11,720 பேர் எழுதியதில், 8,700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்ச மதிப்பெண் உள்பட பல்வேறு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மருத்துவ துறையில், 2,642 பணியிடங்களுக்கு பணி ஆணை கொடுத்தும், மூன்று மாதங்களாக, அந்த பணியில் சேராமல் இருந்த, 27 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 254 பேர் வரும் ஜூலை மாதத்துடன், பணியில் சேர்வதற்கான காலம் முடிவடைகிறது. அவர்களும் சேரவில்லை என்றால், அவர்களின் பணி ஆணை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற, அதே வகுப்பை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்து பணி வழங்கப்படும்.

இவ்வாறு பேசினார்.

கரூர் எம்.எல்.ஏ., செந்தில்

பாலாஜி பேசியதாவது: தமிழக பட்ஜெட்டில், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு, 21,000 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லுாரிக்கு என்னென்ன தேவை இருக்கிறதோ, அதை முழுமையாக செய்வதற்கு அரசு தயாராக உள்ளது. கொரோனா காலத்தில், உயிர் காக்கக்கூடிய சிறப்பு வாய்ந்த பணியை செய்த, உங்கள் அனைவருக்கும் நன்றி. கரூர் மாவட்டம் மருத்துவ துறையில் முதலிடம் பெற வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

கரூர் எம்.பி.,ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம், கரூர் மருத்துவக் கல்லுாரி டீன் லோகநாயகி, மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us