/உள்ளூர் செய்திகள்/கரூர்/பிளாஸ்டிக் பாய்களால் கோரைப்பாய்க்கு மவுசு குறைவுபிளாஸ்டிக் பாய்களால் கோரைப்பாய்க்கு மவுசு குறைவு
பிளாஸ்டிக் பாய்களால் கோரைப்பாய்க்கு மவுசு குறைவு
பிளாஸ்டிக் பாய்களால் கோரைப்பாய்க்கு மவுசு குறைவு
பிளாஸ்டிக் பாய்களால் கோரைப்பாய்க்கு மவுசு குறைவு
ADDED : பிப் 10, 2024 07:31 AM
கரூர்: பல வண்ணங்களில் பிளாஸ்டிக் பாய்கள் விற்பனைக்கு வந்துள்ளதால், கோரைப்பாய்க்கு மவுசு குறைந்துள்ளது. இதனால், கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று கரை பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோரைப்புல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் பாய், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
திருமண சடங்குகளில், கோரைபுல்லில் நெய்யப்பட்ட பாய்க்கு முக்கிய இடம் உண்டு. இந்நிலையில் பல்வேறு வண்ணங்களில், 10 ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் ஒயர்களால் தயாரிக்கப்பட்ட, பாய்கள் விற்பனைக்கு வந்தது. இதனால், கோரைப்பாய்க்கு படிப்படியாக மவுசு குறைந்தது.
கரூர் மாவட்டத்தில் செவிந்திப்பாளையம், அச்சமாபுரம், கடம்பங்குறிச்சி, நெரூர் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆண்டுகளுக்கு முன், 150க்கும் மேற்பட்ட தறிகளில் கோரைப்பாய் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, 50க்கும் குறைவான தறிகளில் கோரைப்பாய் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுகுறித்து, கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களாக, போதிய மழை பெய்ததால், கோரைப்புல் சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. பல டிசைன்களில் கலர் கலரான பிளாஸ்டிக் பாய் விற்பனைக்கு வந்து விட்டதால், வெளிர் மஞ்சள் நிறமுடைய கோரைப்பாய்க்கு மவுசு குறைந்து விட்டது.
இதனால், கோரைப்புல்லுக்கு கலர் போட அதிக செலவு செய்ய வேண்டும். ஒரு தறியை ஏற்பாடு செய்ய ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மின்சார கட்டணம், ஆட்கள் கூலி செலவு போன்றவற்றால் பெரிய அளவில் லாபம் இல்லை.
பிளாஸ்டிக் பாய் வருகையால், கோரைப்பாய் குறைந்தபட்சமாக, 60 முதல், 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. திருமண சீசன் காலங்களில் ஓரளவுக்கு பாய் விற்பனை இருக்கும். பெஞ்ச் வசதி இல்லாத அரசு துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், சத்துணவு மையம், கோவில்கள் மற்றும் அரசு அலுவலகங்களில், கோரைப்பாயை பயன்படுத்தி கொள்ள, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதனால், கூடுதல் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.