/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வறட்சியில் மகசூல் கொடுக்கும் கொள்ளு அனைத்து வகை மண் சாகுபடிக்கு ஏற்றது வறட்சியில் மகசூல் கொடுக்கும் கொள்ளு அனைத்து வகை மண் சாகுபடிக்கு ஏற்றது
வறட்சியில் மகசூல் கொடுக்கும் கொள்ளு அனைத்து வகை மண் சாகுபடிக்கு ஏற்றது
வறட்சியில் மகசூல் கொடுக்கும் கொள்ளு அனைத்து வகை மண் சாகுபடிக்கு ஏற்றது
வறட்சியில் மகசூல் கொடுக்கும் கொள்ளு அனைத்து வகை மண் சாகுபடிக்கு ஏற்றது
ADDED : ஜூன் 10, 2024 01:23 AM
பனமரத்துப்பட்டி: கொள்ளு வறட்சியை தாங்கி வளர்ந்து உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்பாடின்றி மகசூல் கொடுக்கும். அத்துடன் அனைத்து வகை மண் சாகுபடிக்கு ஏற்றது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது: கொள்ளு, வறட்சி மற்றும் உப்புத்தன்மையை தாங்கி, உரங்கள், பூச்சிக்கொல்லி இல்லாமல் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது மற்ற பருப்பு வகைகளை காட்டிலும் மலிவானது. பயிர் நைட்ரஜனை நிலைநிறுத்தும் திறன் கொண்டுள்ளதால் பசுந்தாள் உரமாக பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்கலாம்.
மருத்துவ குணங்கள்: உடல் கொழுப்பை கரைப்பதில் கொள்ளு பெரும் பங்கு வகிக்கிறது. உயர்ந்த புரதத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரே தானியம். பசியை துாண்டுவதோடு தாதுவை பலப்படுத்தும். நம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
சாகுபடி தொழில்நுட்பங்கள்: மே, ஜூனில் கொள்ளு சாகுபடி செய்யலாம். கோ 1, பையூர் -1, 2 ஆகிய ரகங்கள் ஏற்றது. அனைத்து வகை மண் வகைகளிலும் பயிரிடலாம். கொள்ளு கை விதைப்பு மூலம் துாவ வேண்டும். ஹெக்டேருக்கு, 40 கிலோ வரை தேவைப்படும்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் டிரைகோடெர்மா உயிர் பூஞ்சாண கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையுடன் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா, 200 கிராம் வீதம் அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்யலாம். விதைப்பதற்கு முன் அடியுரமாக ஹெக்டேருக்கு, 12.5 டன் மட்கிய எரு இட வேண்டும்.
அறுவடை: காய்கள், 70 முதல், 80 சதவீத முதிர்ச்சி அடைந்த பின் அறுவடை செய்ய வேண்டும். முதிர்ச்சி அடையும் தருணத்தில் மழை அல்லது அதிக ஈரப்பதம் கொண்ட தட்பவெப்ப நிலை இருப்பின் காய்கள் கறுப்பு நிறமாக மாறும். விதையின் தரம் பாதிக்கப்படும் என்பதால் கவனமாக அறுவடை செய்ய வேண்டும்.
விளைச்சல்: ஹெக்டேருக்கு, 500 முதல், 600 கிலோ மகசூல் பெறலாம். விதை, 10 சதவீத ஈரப்பதத்துக்கு கீழ் உலர வைத்த பின், சேமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.