/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் கூட்டுறவு பணியாளர்கள் ராஜினாமா கூண்டோடு விலகல்! சுற்று வட்டாரங்களில் பால் கிடைப்பதில் சிக்கல் உத்திரமேரூர் கூட்டுறவு பணியாளர்கள் ராஜினாமா கூண்டோடு விலகல்! சுற்று வட்டாரங்களில் பால் கிடைப்பதில் சிக்கல்
உத்திரமேரூர் கூட்டுறவு பணியாளர்கள் ராஜினாமா கூண்டோடு விலகல்! சுற்று வட்டாரங்களில் பால் கிடைப்பதில் சிக்கல்
உத்திரமேரூர் கூட்டுறவு பணியாளர்கள் ராஜினாமா கூண்டோடு விலகல்! சுற்று வட்டாரங்களில் பால் கிடைப்பதில் சிக்கல்
உத்திரமேரூர் கூட்டுறவு பணியாளர்கள் ராஜினாமா கூண்டோடு விலகல்! சுற்று வட்டாரங்களில் பால் கிடைப்பதில் சிக்கல்
ADDED : ஜூலை 09, 2024 04:03 AM
உத்திரமேரூர், : காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வந்த 11 தற்காலிக பணியாளர்கள், பணி நிரந்தரம், சம்பளம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவேறாத காரணத்தால், நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனால், உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பால் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய அரசின் துாய பால் உற்பத்தி திட்டத்தின்கீழ், உத்திரமேரூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், பால் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.
உத்திரமேரூர், வேடபாளையம், சோமநாதபுரம், காக்கநல்லூர், பருத்திக்கொல்லை, பட்டாங்குளம் ஓங்கூர், நல்லுார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 1,400க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், இங்குள்ள கொள்முதல் நிலையத்தில் பால் விற்பனை செய்து வருகின்றனர்.
தினசரி காலையில், 2,800 லிட்டர் பாலும், மாலையில் 2,200 லிட்டர் பாலும் என, நாளொன்றுக்கு 5,000 லிட்டர் பால், இந்த நிலையத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இவ்வாறு கொள்முதல் செய்யும் பாலை, உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு 300 லிட்டர் வரை விற்பனை செய்வது போக, மீதமுள்ள பால், சென்னை பால் பண்ணைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த கூட்டுறவு சங்க பால் கொள்முதல் நிலையத்தில், சங்க செயலர் பொம்மகிரி, எழுத்தர் சண்முகம் மற்றும் வெண்டர் எனப்படும் பால் கொள்முதல் செய்யும் அய்யப்பன், சுகுமார், லோகநாதன், முத்து, அர்ச்சுனன், தினேஷ்குமார், சரவணன், ஜெயசூரியா, எம்.உத்திரகுமார், விக்னேஷ், கே.உத்திரகுமார் ஆகிய 13 பேர், சங்கத்தில் பணியாற்றி வந்தனர்.
நடவடிக்கை இல்லை
இதில், வெண்டர்கள் 11 பேரும், தற்காலிக பணியாளர்களாக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளனர்.
இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, தொடர்ந்து சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களிடம் மனு அளித்தும், நேரில் வலியுறுத்தியும், எந்தவித நடவடிக்கையும் இல்லை என, கூறப்படுகிறது.
இந்நிலையில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றாததால், உத்திரமேரூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்கள், செயலர், எழுத்தர் தவிர, மற்ற 11 வெண்டர்களும் தங்களது பணியை ராஜினாமா செய்வதாக, சென்னை பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை கமிஷனர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பால்வள அலுவலர் ஆகியோரிடம் நேற்று கடிதம் வழங்கி உள்ளனர்.
கடந்த, 2009ம் ஆண்டு முதல் தங்களுக்கு வழங்காமல் உள்ள மதிப்பூதிய தொகை குறித்தும், அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூண்டோடு ராஜினாமா நடவடிக்கையால், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல், தங்களது பாலை விற்பனை செய்வதில் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பால் சப்ளையில் சிக்கல் எழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சங்கம் மறுப்பு
இதுகுறித்து, ராஜினாமா செய்த பால் வெண்டர் ஒருவர் கூறியதாவது:
பணி நிரந்தரம் செய்வார்கள் என, பால் கூட்டுறவு சங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன், தற்காலிக பணியாளராக பணியில் சேர்ந்தோம். ஆனால், பணி நிரந்தரம் செய்யவில்லை. மாதவரம் பால் பண்ணையில் இருந்து வரும் பால் கேன்களை கழுவி, பால் ஏற்றி அனுப்ப, ஒரு நாளைக்கு 20 ரூபாய் எங்களுக்கு வழங்கப்படுகிறது.
கூட்டுறவு சங்கத்திலிருந்து மாதம் 4,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைவான சம்பளம் வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும்.
கிராமங்களுக்கு சென்று, காலை, மாலை என இரு வேளையும் பால் கொள்முதல் செய்து வர, ஒரு நாளைக்கு 100 ரூபாய் பெட்ரோல் செலவாகிறது. அந்த செலவையும் சங்கம் கொடுக்க மறுக்கிறது.
சங்கத்தை நம்பி எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் கிராமத்திற்கு செல்லாததால், பால் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள், நேரடியாக உத்திரமேரூர் வந்து தான் பால் கொடுக்க வேண்டும். இது பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.