/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'அம்ருத்' திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல் 'அம்ருத்' திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
'அம்ருத்' திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
'அம்ருத்' திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
'அம்ருத்' திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : மே 27, 2025 01:18 AM
வாலாஜாபாத்,
வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியினரின் குடிநீர் தேவைக்காக வாலாஜாபாத் பாலாற்றில், ஐந்து ஆழ்த்துளை கிணறு அமைத்து அதன் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
எனினும் கோடைக்காலத்தில் இந்த குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால், வாலாஜாபாத் பேரூராட்சியில் கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த 2022- - 23ம் ஆண்டு, 'அம்ருத்' திட்டத்தின் கீழ், 14.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்தொகையில், வாலாஜாபாத் பாலாற்று படுகையில் கூடுதலாக நான்கு ஆழ்த்துளை கிணறுகள்; 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் பம்ப் அறை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, வாலாஜாபாத் பேரூராட்சி, மெக்ளின்புரத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, நகர் பகுதிக்கு நிலத்தடியில் புதிய பகிர்மான குழாய்கள்; வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டு தெருக்களிலும், 47 கி.மீ., துாரத்திற்கு நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பழைய குடிநீர் பைப்புகளை அகற்றி, புதிய பைப்புகள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இப்பணிகள் அனைத்திற்கும் டெண்டர் விடப்பட்டு கடந்த ஆண்டு துவங்கியது. இந்நிலையில், பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும், விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாலாஜாபாத் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா கூறியதாவது:
வாலாஜாபாத் பேரூராட்சியில், 'அம்ருத்' திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்ட பணிகள், தற்போது, 65 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டு, வரும் பருவ மழை காலத்திற்குள் திட்ட செயல்பாடுகள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.