/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மூலவர் சன்னிதி திருப்பணி துவக்கம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மூலவர் சன்னிதி திருப்பணி துவக்கம்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மூலவர் சன்னிதி திருப்பணி துவக்கம்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மூலவர் சன்னிதி திருப்பணி துவக்கம்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மூலவர் சன்னிதி திருப்பணி துவக்கம்
ADDED : ஜூன் 06, 2025 11:35 PM
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில், 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்பாலிக்கிறார்.
இக்கோவில் 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் திட்டமிட்டனர்.
அதன்படி, கோவில் நிதி, உபயதாரர்கள் நிதி 1.50 கோடி ரூபாய் மதிப்பில், 2023ம் ஆண்டு மார்ச் மாதம் புனரமைப்பு பணிகள் துவங்கின.
உற்சவர், விநாயகர், சண்முகர், திரிபுரசுந்தரி அம்மன், பைரவர், இடும்பன், கடம்பன் சன்னிதிகள் புனரமைத்தல்.
பிரகாரத்தில் கருங்கல் தரை அமைத்தல், விமானங்கள், கோபுரங்கள் வண்ணம் தீட்டுதல், தள வரிசை பழுதுபார்த்தல், வடக்கு ராஜகோபுரம் கட்டுதல், மடப்பள்ளி கட்டுதல், தேர் கொட்டகை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளன.
வரும் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 28ம் தேதி பந்தக்கால் நடும் விழா நடந்தது.
இந்நிலையில், மூலவர் சன்னிதி திருப்பணிக்காக, நேற்று காலை யாக பூஜையுடன் பாலாலயம் செய்யப்பட்டது.
மூலவர் சன்னிதி திருப்பணிக்காக, இன்று முதல், ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் வரை, மூலவர் சன்னிதியில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.