/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வீடுகளில் கழிவுநீரை அகற்ற ரூ.4,000 வசூல்...அடாவடி: அனுமதியில்லாத லாரிகளுக்கு கிடுக்கிப்பிடி? வீடுகளில் கழிவுநீரை அகற்ற ரூ.4,000 வசூல்...அடாவடி: அனுமதியில்லாத லாரிகளுக்கு கிடுக்கிப்பிடி?
வீடுகளில் கழிவுநீரை அகற்ற ரூ.4,000 வசூல்...அடாவடி: அனுமதியில்லாத லாரிகளுக்கு கிடுக்கிப்பிடி?
வீடுகளில் கழிவுநீரை அகற்ற ரூ.4,000 வசூல்...அடாவடி: அனுமதியில்லாத லாரிகளுக்கு கிடுக்கிப்பிடி?
வீடுகளில் கழிவுநீரை அகற்ற ரூ.4,000 வசூல்...அடாவடி: அனுமதியில்லாத லாரிகளுக்கு கிடுக்கிப்பிடி?
ADDED : செப் 18, 2025 10:56 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், வீடுகளில் சேகரமாகும் கழிப்பறை தொட்டி கழிவுநீரை அகற்ற, தனியார் லாரிகள் 4,000 ரூபாய் கேட்டு அடாவடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் இயக்கப்படும் கழிவுநீர் அகற்றும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் அகற்றுவதற்கான கட்டணத்தை, மாநகராட்சி நிர்ணயம் செய்ய வேண்டும் என, நகர மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் உள்ளது.
மீதமுள்ள 11 வார்டுகளில், பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், அப்பகுதியில் வசிப்போர், அவரவர் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை தொட்டியில், கழிவுநீரை சேகரிக்கின்றனர்.
கட்டுப்பாடுகள்
கழிப்பறை தொட்டி நிரம்பினால், தனியார் கழிவுநீர் அகற்றும் லாரிகள் மூலமாக அகற்றுகின்றனர். இதற்காக ஒவ்வொரு முறையும் 3,000 ரூபாய் வரை தரவேண்டியதாகிறது.
இந்த தொகையே அதிகம் என, காஞ்சிபுரத்தில் 10,000க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போர் புகார் கூறிவரும் நிலையில், தற்போது அத்தொகையை 4,000 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.
அரசு சார்பில், கட்டணம் நிர்ணயிக்கப்படாததால், கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்கள், தங்களுக்கென ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, வீட்டு உரிமையாளர்களிடம் அடாவடியாக ஆயிரக்கணக்கான ரூபாய் வசூலிப்பதாக, நகர மக்கள் புலம்புகின்றனர்.
காஞ்சிபுரம் நகர மக்கள் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40க்கும் மேற்பட்ட கழிவுநீர் அகற்றும் லாரிகள் இயக்கப்படுகின்றன. அதில், 13 மட்டுமே, மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டவை.
முறையாக பதிவு பெற்ற லாரிகளுக்கு, உரிமம், தகுதி சான்றிதழ் போன்றவை இருப்பதோடு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனால், எந்தவித விதிமுறைகளும் பின்பற்றாமல், 25க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குவதாலேயே, கழிவுநீர் அகற்ற 4,000 ரூபாய் கேட்டு அடாவடி செய்கின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இத்தொகையை தர மிகவும் சிரமப்படுகின்றனர்.
கழிப்பறை தொட்டியில் எடுக்கும் கழிவுநீரை, நத்தப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் லாரிகள் திறந்து விட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட லாரிகள் மட்டுமே இங்கு வரவேண்டும். ஆனால், பதிவு செய்யாத சில லாரிகளும் இந்நிலையத்தை பயன் படுத்துகின்றன.
மேலும், சில லாரிகள், ஓரிக்கை பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில், கழிவுநீரை திறந்து விடுகின்றன.
இது போன்ற கடுமையான விதிமீறல் பிரச்னைகளை, போலீசார், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் என, எந்த தரப்பினரும் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை.
மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் இயக்கப்படும் கழிவுநீர் அகற்றும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் அகற்றுவதற்கான கட்டணத்தை, மாநகராட்சி நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
திட்ட அறிக்கை
கழிவுநீர் லாரிகளுக்கு கட்டணம் செய்வது சம்பந்தமாக அரசு ஆலோசித்து வருகிறது. கழிவுநீர் அகற்ற 1,000 - 1,500 ரூபாய் வரை வசூலிக்கலாம் என, அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி உள்ளோம்.
தற்போதைக்கு கழிவுநீர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, கட்டணத்தை குறைக்க திட்டமிட்டு உள்ளோம்.
கழிவுநீர் அகற்றும் லாரிகள், மாநகராட்சிக்கு, 300 ரூபாய் கட்டணம் செலுத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை திறந்து விடலாம். ஆனால், பொது வெளியில், மழைநீர் கால்வாயில் திறந்துவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓரிக்கை, அதியமான் நகர் அருகே செல்லும் மழைநீர் கால்வாயில், லாரி ஒன்று கழிவுநீரை திறந்துவிட்டது. இதை வீடியோ ஆதாரத்துடன், போலீஸ், மாநகராட்சி உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவுநீர் லாரிகள் செய்யும் அடாவடியை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.
- வி.நந்தகுமார், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., அதியமான் நகர், காஞ்சிபுரம்.
கழிப்பறை தொட்டி கழிவுநீரை அகற்ற 4,000 ரூபாய் கேட்டு அடாவடி செய்கின்றனர். அனைத்து லாரிகளும், ஒரே தொகையை நிர்ணயம் செய்துள்ளனர். 4,000 ரூபாய் கொடுப்பதற்கு சிரமமாக உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுத்து, இந்த தொகையை குறைக்க வேண்டும்.
- வி.சங்கர், செவிலிமேடு, காஞ்சிபுரம்.