/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பிள்ளையார்பாளையத்தில் வங்கி கிளை அமைக்க கோரிக்கை பிள்ளையார்பாளையத்தில் வங்கி கிளை அமைக்க கோரிக்கை
பிள்ளையார்பாளையத்தில் வங்கி கிளை அமைக்க கோரிக்கை
பிள்ளையார்பாளையத்தில் வங்கி கிளை அமைக்க கோரிக்கை
பிள்ளையார்பாளையத்தில் வங்கி கிளை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2025 12:33 AM
காஞ்சிபுரம்:பிள்ளையார்பாளையம் பகுதியில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றை துவக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில், 50,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மக்கள் தொகை
பட்டு நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் அதிகளவு வசிக்கும் பிள்ளையார்பாளையத்தில், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மாநகராட்சி வரி வசூல் மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நுாலகம், மருத்துவமனை உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
மாநகராட்சியில் மக்கள் தொகை அதிகம் உள்ள பிள்ளையார்பாளையத்தில், தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளை கூட இல்லாததால், இப்பகுதியில் வசிக்கும் பல்வேறு தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு செல்ல காஞ்சிபுரம் காந்தி சாலை, சாலை தெரு, அன்னை இந்திரா சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதிக்கு சென்றுவர ஓய்வூதியதாரர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், நகைக்கடன் பெறுவோர் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
பிள்ளையார்பாளையத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை துவக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நடவடிக்கை தேவை
இப்பகுதியில், 8 ஏ.டி.எம்.,இயந்திரங்களை தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அமைத்துள்ளன.
ஆனால், மற்ற பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கிகள் இல்லாதது, இப்பகுதி மக்களுக்கு அலைச்சலை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, பிள்ளையார்பாளையம் பகுதியில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றை துவக்க, வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.