Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சிப்காட் தொழில்பூங்காவிற்கு புதிய தண்ணீர் வழித்தடம்...அளவீடு!:உபரி நீரை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடிவு

சிப்காட் தொழில்பூங்காவிற்கு புதிய தண்ணீர் வழித்தடம்...அளவீடு!:உபரி நீரை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடிவு

சிப்காட் தொழில்பூங்காவிற்கு புதிய தண்ணீர் வழித்தடம்...அளவீடு!:உபரி நீரை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடிவு

சிப்காட் தொழில்பூங்காவிற்கு புதிய தண்ணீர் வழித்தடம்...அளவீடு!:உபரி நீரை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடிவு

ADDED : ஜூலை 02, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை சிப்காட் பூங்காவிற்கு, புதிய தண்ணீர் வழித்தடம் அமைக்கும் பணிக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அளவிடும் பணி துவங்கி உள்ளது. இதன் மூலமாக, கோயம்பேடு பகுதியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட உபரி நீரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்ய, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்து உள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், தொழில் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதால், 30 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதன் மூலமாக, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இங்குள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகின்றன.

இதில், எலக்ட்ரானிக், ஹார்டுவேர், தொலைதொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், டயர், ரசாயணம், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும், 70,000 கோடிக்கு உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இது போன்ற தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், கனரக வாகனங்களை இயக்குவோர், தனியார் தொழிற்சாலைகளின் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் என, ஏராளமான வசதிகள் உள்ளன.

இருப்பினும், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, தண்ணீர் பற்றாக்குறை நிலவியது.

இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் மற்றும் கோயம்பேடு பகுதியில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தனியார் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்திவருகின்றனர்.

இந்த உபரி நீரை, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம், சுங்குவார்சத்திரம் வழியாக, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை இணைக்கும் விதமாக, 62 கி.மீ. துாரத்திற்கு புதிய தண்ணீர் வழித்தடத்தை உருவாக்குவதற்கு புதிய பைப்லைன் போடப்பட உள்ளது.

இந்த பணிக்கு, பள்ளூர்- -சோகண்டி - -சுங்குவார்சத்திரம் சாலை மற்றும் சுங்குவார்சத்திரம்- - ஒரகடம் சாலை இருபுறமும் அளவிடும் பணியை துவக்கி உள்ளனர்.

இதன் மூலமாக, சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கும், மற்றொரு சிப்காட் தொழில் பூங்காக்களுக்கு உபரி நீர் பகிர்ந்து கொள்ளும் நடைமுறை எளிதாக இருக்கும்.

மேலும், தனியார் தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன் பாதிப்பு இல்லாமல் இருக்கும் என, தனியார் தொழில் துறையினர் தெரிவித்தனர்.

கோயம்பேடு பகுதியில் சுத்திகரிக்கும் தண்ணீர், ஒரகடம் சிப்காட் வரையில் வருகிறது.

அந்த தண்ணீரை வேண்பாக்கம், குண்ணவாக்கம், வாரணவாசி, வாலாஜாபாத், ஊத்துக்காடு ஆகிய தனியார் தொழிற்சாலைகளுக்கு இணைப்பு வழங்கினால், தனியாரிடம் தண்ணீர் கொள்முதல் செய்வது குறையும். நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக எடுத்து செல்ல வேண்டி இருக்காது.

இதுகுறித்து, ஒரகடம் சிப்காட் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோயம்பேடு கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் இருந்து, தனியார் தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பெற்று வருகிறோம்.

இதன் உபரி நீரை, ராணிப்பேட்டை சிப்காட் பகுதிக்கு அனுப்புவதற்கு, புதிய தண்ணீர் வழித்தடத்திற்கு புதிய பைப்லைன் போடும் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாய் வாரியம் வாயிலாக துவக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலமாக, தனியார் தொழிற்சாலைகள் இடையே தண்ணீர் பகிர்வு உற்பத்தி பொருட்கள் தயாரிக்க உதவும். இதே தண்ணீரை குடிநீராகவும் பயன்படுத்தலாம் என, கூறுகின்றனர்.

நாங்கள் யாரும் இதுவரையில் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக, செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us