/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள்...ஆவேசம்: சாலை, குடிநீர் திட்ட பணி முடங்கியதாக குற்றச்சாட்டுவாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள்...ஆவேசம்: சாலை, குடிநீர் திட்ட பணி முடங்கியதாக குற்றச்சாட்டு
வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள்...ஆவேசம்: சாலை, குடிநீர் திட்ட பணி முடங்கியதாக குற்றச்சாட்டு
வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள்...ஆவேசம்: சாலை, குடிநீர் திட்ட பணி முடங்கியதாக குற்றச்சாட்டு
வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள்...ஆவேசம்: சாலை, குடிநீர் திட்ட பணி முடங்கியதாக குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 12, 2025 11:34 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில் புதிதாக சாலை அமைக்காதது, மழைநீர் வடிகால்வாய் ஏற்படுத்தாதது, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு இல்லாதது குறித்து, மன்ற கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். வளர்ச்சி திட்ட பணிகளை உடனுக்குடன் துரிதமாக செயல்படுத்த வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட் டம், வாலாஜாபாத் தேர்வுநிலை பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதன் தலைவர் இல்லாமல்லி தலைமையில், மொத்தமுள்ள 15 வார்டு கவுன்சிலர்களில், 13 பேர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
தி.மு.க., - வெங்கடேசன்: வாலாஜாபாத் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 70 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
எனினும், குப்பை கழிவுகள் தேக்கம் அதிகம் காணப்படுகின்றன. எனவே, தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்கள், பணியின் வகைபாடு குறித்து பேரூராட்சி செயலர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
பேரூராட்சியில் மூன்று மாதங்களாக கொசு ஒழிப்பு மருந்து அடிக்காததால், கொசு அதிகரித்துள்ளது.
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
செயல் அலுவலர், மாலா: கால்நடைகளை சாலைகளில் விடக்கூடாது என, பலருக்கும் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
தெரு நாய்களை கட்டுப்படுத்த 'ப்ளு கிராஸ்' அமைப்பு மற்றும் கால்நடைத் துறை வாயிலாக அனுமதி பெற்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்கான திட்டம் விரைவாக மேற்கொள்ளப்படும்.
ம.தி.மு.க., - சிவசங்கரி: வாலாஜாபாத் பேரூராட்சி, தாசப்ப சுபேதர் தெருவில் சிறு மின்விசை பம்ப் அமைக்கவும், 10வது வார்டில் உள்ள தெருக்களில் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவும் ஏற்கனவே கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை நிதி ஒதுக்குதல் போன்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
செயல் அலுவலர், மாலா: நிதி இருப்புக்கு ஏற்ப பணிகள் தேர்வு செய்யப்படுகிறது. விரைவில், 10வது வார்டுக்கான சாலை, கால்வாய், குடிநீர் போன்ற வசதிகள் மேற்கொள்ளப்படும்.
தி.மு.க., - கருணாகரன்: ஐந்தாவது வார்டில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்யாமல் சீர்கேடாக உள்ளது. வல்லப்பாக்கம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை உள்ளது. இதை தீர்க்க வேண்டும்.
செயல் அலுவலர் - மாலா: குடிநீர் பிரச்னையை தீர்க்க 12 லட்சம் ரூபாய் செலவில் சிறு மின்விசை பம்பு அமைக்கப்பட உள்ளது. கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - கலைவாணி: வாலாஜாபாத் பேரூராட்சியின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைத்தபோது, இடையூறாக இருந்த மின்கம்பங்கள் இடம் மாற்றம் செய்யாமலே கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், கம்பம் சேதம் மற்றும் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. மின் கம்பங்களை இடம் மாற்ற வேண்டும். பேரூராட்சியில் குப்பை கழிவுகள் எடுக்க துாய்மை பணியாளர்கள் பயன்படுத்தும் தள்ளுவண்டிகளுக்கு மாற்றாக பேட்டரி வாகனங்களை கூடுதலாக்க வேண்டும்.
செயல் அலுவலர் - மாலா: கடந்த ஆண்டுகளில் திட்ட பணிகள் மேற்கொண்டபோது மின் கம்பங்கள் அகற்றாமல் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்கள் குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., - தேன்மொழி: சேர்க்காடு பகுதியில் உள்ள எஸ்.வி., கோவில் தெரு மற்றும் சீனிவாசப் பெருமாள் குறுக்குத்தெருவில் கான்கிரீட் சாலை ஏற்படுத்த வேண்டும். குழாய் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க டெண்டர் விடப்பட்டும், பணி துவங்காமல் உள்ளது.
செயல் அலுவலர் - மாலா: தெருவில் கான்கிரீட் சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். டெண்டர் விட்டு துவங்காத பணி குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு விரைவில் துவங்கப்படும்.
அ.தி.மு.க., - மகேஸ்வரி: ஆறாவது வார்டில் உள்ள இந்திரா நகர் முதல் தெரு, 2வது தெரு, 3வது தெரு மற்றும் ரங்கப்பிள்ளை தெருவில் புதிதாக கான்கிரீட் சாலை, மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிறுபாலம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
தி.மு.க., - சுரேஷ்குமார்: வாலாஜாபாத் பேரூராட்சியில் அம்ருத் திட்ட பணிகள் மேற்கொண்டபோது, குடிநீர் குழாய் புதைக்க தெரு பகுதிகளில் தோண்டிய பள்ளங்கள் சரி வர மூடாததால் விபத்து அபாயம் நிலவுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.