Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கிணற்றில் போட்ட கல்! இடம் தேர்வாகியும் மாவட்ட மருத்துவமனை திட்டம்: அடுத்தகட்ட பணி துவங்காததால் மக்கள் அதிருப்தி

கிணற்றில் போட்ட கல்! இடம் தேர்வாகியும் மாவட்ட மருத்துவமனை திட்டம்: அடுத்தகட்ட பணி துவங்காததால் மக்கள் அதிருப்தி

கிணற்றில் போட்ட கல்! இடம் தேர்வாகியும் மாவட்ட மருத்துவமனை திட்டம்: அடுத்தகட்ட பணி துவங்காததால் மக்கள் அதிருப்தி

கிணற்றில் போட்ட கல்! இடம் தேர்வாகியும் மாவட்ட மருத்துவமனை திட்டம்: அடுத்தகட்ட பணி துவங்காததால் மக்கள் அதிருப்தி

ADDED : செப் 21, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மாவட்டத்தில், மருத்துவக் கல்லுாரியுடன் கூடிய அரசு மருத்துவமனைக்கு, காரை கிராமத்தில் இடம் தேர்வு செய்து ஓராண்டாகியும், அடுத்தகட்ட பணி துவங்காததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விபத்து மற்றும் இதய நோய் சிகிச்சைக்கு 39 கி.மீ., பயணித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, அவர்கள் புலம்புகின்றனர். காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும்போது, செங்கல்பட்டு பகுதியில், அரசு மருத்துவக் கல்லுாரியுடன்கூடிய அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் சரி செய்ய முடியாத விபத்து, இதய நோய்கள் சிகிச்சைக்கு, இம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 2019ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டமாக தனியாக பிரிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மருத்துவக் கல்லுாரியுடன் கூடிய, அரசு மருத்துவமனை இருக்க வேண்டும் என்பது மருத்துவத் துறையின் கட்டமைப்பாகும்.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் பிரிந்ததையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரியுடன்கூடிய மருத்துவமனை அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது.

25 ஏக்கர் நிலம் இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் இடம் தேர்வு செய்யும் பணியை உடனடியாக துவக்கியது. அதன்படி காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தில், 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆய்வு செய்தார். இதையடுத்து அத்திட்டம், கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

இதனால், காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விபத்து ஏற்பட்டால், 39 கி.மீ., இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்த பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரிக்கு செல்ல ஒரு மணி நேரம் ஆவதால், விபத்தில் சிக்கியவர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

இதை தவிர்க்க, காரை பகுதியில் மருத்துவக்கல்லுாரியுடன் கூடிய அரசு மருத்துவமனைக்கான பணிகளை, அரசு உடனே துவக்க வேண்டும்.

இங்கு மருத்துவமனை அமைந்தால், சிறுவாக்கம், பரந்துார், கொட்டவாக்கம், சிறுவள்ளூர், படுநெல்லி, கம்மவார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உயிரிழப்பு இதுகுறித்து, காஞ்சிபுரம் மக்கள் கூறியதாவது:

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறிய விபத்துகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

பயண நேரத்தில், விபத்தில் சிக்கியவருக்கு கண்காணிப்பு இல்லாததால், உயிரிழப்பு ஏற்பட நேரிடுகிறது. இதை தவிர்க்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரியுடன் கூடிய மருத்துவமனை துவக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு மருத்துவக்கல்லுாரி என்பது மருத்துவ பல்கலை தொடர்புடையது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்த பிறகே, பிற வளர்ச்சி பணிகள் செய்யப்படும்' என்றனர்.

காஞ்சிபுரம் வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'காரை கிராமத்தில், 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 2020ம் ஆண்டு மருத்துவக் கல்லுாரி பெயருக்கு பட்டா மாற்றமும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அரசு அனுமதி அளித்த பின், மருத்துவக்கல்லுாரி பணிகள் துவக்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us