/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சென்னையுடன் செய்யாறை இணைக்க 43 கி.மீ., சாலை ...புதிய திட்டம்: காஞ்சி, செங்கையில் நிலம் எடுக்கும் பணிகள் துவக்கம் சென்னையுடன் செய்யாறை இணைக்க 43 கி.மீ., சாலை ...புதிய திட்டம்: காஞ்சி, செங்கையில் நிலம் எடுக்கும் பணிகள் துவக்கம்
சென்னையுடன் செய்யாறை இணைக்க 43 கி.மீ., சாலை ...புதிய திட்டம்: காஞ்சி, செங்கையில் நிலம் எடுக்கும் பணிகள் துவக்கம்
சென்னையுடன் செய்யாறை இணைக்க 43 கி.மீ., சாலை ...புதிய திட்டம்: காஞ்சி, செங்கையில் நிலம் எடுக்கும் பணிகள் துவக்கம்
சென்னையுடன் செய்யாறை இணைக்க 43 கி.மீ., சாலை ...புதிய திட்டம்: காஞ்சி, செங்கையில் நிலம் எடுக்கும் பணிகள் துவக்கம்
ADDED : செப் 11, 2025 10:30 PM

காஞ்சிபுரம்:சென்னையுடன், செய்யாறு தொழிற்தட பகுதியை இணைக்கும் வகையில், புதிதாக 43 கி.மீ.,க்கு நான்கு வழி சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட, 33 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன.
சென்னை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், சிப்காட், சிட்கோ போன்ற தொழிற் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் பல தொழிற்சாலைகள் புதிதாக துவங்கப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி, அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. குறிப்பாக, செய்யாறு சிப்காட் சுற்றிலும் புதிய தொழிற்சாலைகள் துவங்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து செய்யாறு சிப்காட் பகுதிக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக, கனரக வாகனங்கள் செல்வதற்கான விசாலமான சாலை இல்லாதது, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
நான்குவழி சாலை சென்னை துறைமுகம், தென்சென்னை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் ஆகிய பகுதிகளில் இருந்தும், கனரக வாகனங்கள் செய்யாறு சிப்காட் பகுதிக்கு செல்ல புதிய இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என, வர்த்தகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து செய்யாறு சிப்காட் பகுதிக்கு கனரக வாகனங்கள், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. காஞ்சிபுரம் நகரத்தை கடந்து, துாசி, மாமண்டூர் ஆகிய பகுதிகளை வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. சாலைகள் குறுகலாகவும், போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணமாக உள்ளது.
இதனால், நான்கு வழிச்சாலை அமைத்து, செய்யாறு தொழிற் தட பகுதியை சென்னையுடன் இணைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
இந்த இணைப்பு சாலை, சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து துவங்குகிறது.
அங்கிருந்து செய்யாறு சிப்காட் வரை, புதிதாக 43.2 கி.மீ., சாலை அமைகிறது. இந்த சாலை, நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 30 கிராமங்கள் வழியாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில், மூன்று கிராமங்கள் என, 33 கிராமங்கள் வழியாக சாலை அமைக்கப்பட உள்ளது.
619 ஏக்கர் இந்த, 33 கிராமங்களிலும் நிலம் கையகப்படுத்தி, 60 மீட்டர் அகல சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர், நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவங்கி உள்ளனர்.
மேலும், 33 கிராமங்களிலும் உள்ள நில உரிமையாளர்களுக்கு, வருவாய் துறையினர் முதற்கட்ட அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி, அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். நில உரிமையாளர்கள், வருவாய் துறையினர் முன் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர்.
சாலை அமைக்க, 492 ஏக்கர் பட்டா நிலங்களும், 127 ஏக்கர் அரசு நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
இந்த சாலைக்கு நில உரிமையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
ஓராண்டுக்குள் நில எடுப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிடும் என, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :
செய்யாறு சிப்காட் தொழிற்தட பகுதியை சென்னையுடன் இணைப்பதற்காகவே இந்த இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. நில எடுப்புக்கு தேவையான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
திட்ட அறிக்கை நில எடுப்பு பணிகள் முடிந்த பின், சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கும். இதற்கு, டி.பி.ஆர்., எனப்படும் விரிவான திட்ட அறிக்கை வந்தால்தான், எத்தனை இடங்களில் சிறுபாலம், உயர்மட்ட பாலம், கால்வாய் போன்றவை அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட முழு விபரங்கள் தெரிய வரும்.
இந்த சாலை அமைக்கப்பட்டால், சென்னையிலிருந்து செய்யாறு சிப்காட் பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வது எளிதாகும்.
வாலாஜாபாத், காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல், நேரடியாக செய்யாறு செல்ல முடியும். கனரக வாகனங்கள் மட்டுமின்றி, பிற வாகனங்களும் செய்யாறு வரை விரைவாகவும், எளிதாகவும் செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.