/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 236 ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித்தரம்... கேள்விக்குறி:அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரியும் 236 ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித்தரம்... கேள்விக்குறி:அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரியும்
236 ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித்தரம்... கேள்விக்குறி:அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரியும்
236 ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித்தரம்... கேள்விக்குறி:அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரியும்
236 ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித்தரம்... கேள்விக்குறி:அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரியும்
ADDED : செப் 24, 2025 10:39 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 236 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. இதனால், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறையும் என, மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 50 அரசு உயர்நிலை, 51 மேல்நிலை, 20 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம், 121 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், 40,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ளன.
இதில், 236 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு ஆசிரியர் இரண்டு மற்றும் அதற்கு மேல் பாட திட்டங்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஓரளவிற்கு சரி கட்ட முடிகிறது. ஆனால், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனி பாடங்கள் என்பதால், பட்டதாரி ஆசிரியர்கள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
குறிப்பாக, கணிதம், வேதியியல், இயற்பியல், உயிர் வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு போதிய முதுகலை பாடப்பிரிவு ஆசிரியர்கள் இல்லை. மேலும், ஆங்கில வழிக்கல்வி மற்றும் தமிழ் வழிக்கல்வி மாணவ - மாணவியருக்கு கற்பித்தல் சிரமம் உள்ளது.
தமிழ் வழிக்கல்வி சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல், முக்கிய வினாக்களை மட்டும் குறித்து கொடுத்து, அவர்களை படிக்க சொல்லி விடுகின்றனர்.
இதே நிலை நீடித்தால், அரசு பள்ளி மாணவ - மாணவியரின் கல்வி தரம் பாதிக்கப்படுவதோடு, தேர்ச்சி விகிதமும் குறையும் நிலை உள்ளது என, பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அரசு பள்ளி மாணவ - மாணவியரின் பெற்றோர் கூறியதாவது:
ஆறாம் வகுப்பு முதல் ஆங்கில வழி படித்துவிட்டு வரும் மாணவர்கள், மேல்நிலை படிக்க செல்லும்போது, பாடம் நடத்துவதற்கு ஏற்ற ஆங்கில பாடப்பிரிவுக்கு ஆசிரியர்கள் இல்லை.
ஆகையால், தமிழ் வழிக்கல்வி பாடப்பிரிவு எடுத்துக் கொள்ளுங்கள் என, ஆசிரியர்கள் கூறிவிடுகின்றனர்.
போக்குவரத்து வசதிக்கு ஏற்ப வேறு வழியின்றி தமிழ் வழி கல்வி சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.
இதை தவிர்க்க, ஆங்கில வழி கல்விக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது தமிழகம் முழுதுமாக இருக்கத்தான் செய்கிறது. மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவினர் சார்பில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பாடங்களை சொல்லிக் கொடுக்கிறோம்.
ஆங்கில வழி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கை இருந்ததால், தமிழ் வழியில் மாணவர்களை சேர்த்திருப்பர். ஆங்கில வழிக்கல்வியும் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.