/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வெங்கச்சேரி விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் ஆர்வம் வெங்கச்சேரி விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் ஆர்வம்
வெங்கச்சேரி விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் ஆர்வம்
வெங்கச்சேரி விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் ஆர்வம்
வெங்கச்சேரி விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் ஆர்வம்
ADDED : ஜூலை 22, 2024 05:54 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர்- - காஞ்சிபுரம் சாலையில், வெங்கச்சேரி, ஆதவப்பாக்கம், கடம்பரநாதர் கோவில், மணல்மேடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள, விளை நிலங்கள், மணல் பூமியாக உள்ளதால், எந்த பயிரை சாகுபடி செய்தாலும், நல்ல விளைச்சலை கொடுக்கின்றன.
இதனால், இங்குள்ள விவசாயிகள் நெல், கரும்பு, சவுக்கு, வேர்க்கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்களான கத்தரி, வெண்டை, கீரை உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகின்றனர்.
எனினும், பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த, விவசாயிகள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டி உள்ளதால், அதிக லாபம் பெற முடியாத நிலை உள்ளதாக கூறுகின்றனர்.
இதை தவிர்க்க, வெங்கச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல விவசாயிகள், தற்போது சவுக்கு பயிரை சாகுபடி செய்ய துவங்கி உள்ளனர்.
இதுகுறித்து வெங்கச்சேரி விவசாயிகள் கூறியதாவது:
இப்பகுதியில் சவுக்கு மரங்கள் ஊட்டமாக வளர்ந்து நல்ல லாபத்தை கொடுப்பதோடு, குறைந்த செலவு மற்றும் குறைந்த நீர்பாசனத்தில் சாகுபடி செய்ய ஏதுவாக உள்ளது.
நடவு செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பின், ஐந்து ஆண்டுகள் வரை, அளவு தேவைக்கேற்ப விற்பனை செய்கிறோம்.
இங்கு விளையும் சவுக்கு மரங்களை, காஞ்சிபுரம், உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், நேரடியாகவே நிலங்களுக்கு வந்து, ஆட்களை வைத்து வெட்டி எடை போட்டு லோடு ஏற்றி செல்கின்றனர்.
இதனால், அறுவடை கூலி, போக்குவரத்து செலவு போன்றவை மிச்சமாகின்றன. கடந்த ஆண்டு 1,000 கிலோ சவுக்கு, 7,000 ரூபாய் வீதம் விற்பனை செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.