Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 300 மருத்துவ மாணவர்களிடம் சிறப்பு பயிற்சி பெயரில் மோசடி

300 மருத்துவ மாணவர்களிடம் சிறப்பு பயிற்சி பெயரில் மோசடி

300 மருத்துவ மாணவர்களிடம் சிறப்பு பயிற்சி பெயரில் மோசடி

300 மருத்துவ மாணவர்களிடம் சிறப்பு பயிற்சி பெயரில் மோசடி

ADDED : ஜூலை 22, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
சென்னை : கே.கே.நகர் 80 அடி சாலையில் உள்ள 'கோல்டன் பேலஸ்' திருமண மண்டபத்தில் நேற்று, பேராசிரியர் டாக்டர் எம்.ஸ்ரீராம் பட் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரி மூத்த மருத்துவர்கள், ஜூலை 21ம் தேதி சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளனர் என, சமூக வலைதளத்தில் விளம்பரம் ஒன்று வெளியானது.

இந்த சிறப்பு வகுப்பிற்காக, பஞ்சாப், ஆந்திரா, கோல்கட்டா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக, தலா 2,000 ரூபாய் கட்டி பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை கே.கே.நகரில் உள்ள மண்டபத்திற்கு பல இடங்களில் இருந்து மருத்துவ மாணவர்கள் வந்திருந்தனர்.

ஆனால், நேற்று காலை சிறப்பு வகுப்பு எடுக்க எந்த மருத்துவர்களும் வரவில்லை. ஆத்திரமடைந்த மாணவர்கள், சிறப்பு வகுப்பிற்கு ஏற்பாடு செய்த, கே.கே.நகர் 8வது செக்டார், 43வது தெருவைச் சேர்ந்த கதிர் கருப்பையா, 23, என்பவரை சுற்றி வளைத்தனர்.

அவர், சிறப்பு வகுப்பு எடுப்பதாக இருந்த டாக்டர் எம்.ஸ்ரீராம் பட் உடல் நலக்குறைவால் வரவில்லை என, தெரிவித்துள்ளார். இதனால், கட்டிய பணத்தை திருப்பி தர வேண்டும் என, மாணவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் அருள் சந்தோச முத்து தலைமையிலான கே.கே.நகர் போலீசார், கதிர் கருப்பையாவிடம் விசாரித்தனர். அவர் பிரபல தனியார் மருத்துவமனை எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு மாணவர் என்பது தெரியவந்தது.

மருத்துவ மாணவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை, 'ஆன்லைன்' வாயிலாக திருப்பி அனுப்புவதாக, கதிர் மற்றும் அவரது பெற்றோர் உறுதியளித்ததை அடுத்து, மருத்துவ மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து மருத்துவ மாணவர்கள் கூறியதாவது:

மருத்துவ சிறப்பு வகுப்பு எடுக்கவிருப்பது எங்கள் பாடபுத்தகத்தின் நுாலாசிரியர் என தெரிந்து, உடனே 'ஆன்லைன்' வாயிலாக புக் செய்தோம். அதற்கு 1,800 ரூபாய் வசூலிக்கப்பட்டது. நேரடியாக வந்தோரிடம் 2,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

வருவதற்கு சற்று தாமதமானாலும் அனுமதி இல்லை என, விளம்பரம் செய்யப்பட்டது. இதனால், காலை 9:00 மணிக்கு முன்னரே, பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

நுழைவாயில் கத்தரி, கையுறை, ஊசி உள்ளிட்டவை அடங்கிய அறுவை சிகிச்சைக்கான சிறிய பாக்ஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வகுப்பு எடுக்க உள்ள மருத்துவருக்கு உடல்நலக்குறைவால் வரமுடியவில்லை.

அதற்கு பதிலாக இறுதியாண்டு மருத்துவ மாணவர்களை வைத்து வகுப்புகள் நடத்த இருந்தனர். அப்போது தான் மோசடி என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசில் புகார் அளித்தோம்.

உணவு வழங்கப்படும் என விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குடிநீர் கூட கிடைக்கவில்லை. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த மாணவ - மாணவியர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இதுபோன்று மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு பெயரில் மோசடி, சென்னையில் பல இடங்களில் நடப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த மோசடிக்கு பின்னால் உள்ள பெரும் புள்ளிகளை, போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us