ADDED : ஜூலை 10, 2024 12:07 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் கோவில் அருகில் உள்ளது. பொய்கை ஆழ்வார் இக்குளத்தில் அவதரித்ததால் பொய்கை ஆழ்வார் குளம் என அழைக்கப்படுகிறது. நாளடைவில் இக்குளத்தின் பெயர் மருவி, தற்போது பொய்யாகுளம் என அழைக்கப்படுகிறது.
இக்குளம் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்த நிலையில் இருந்தது. இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, சென்னை பெட்ரோபேக் ஆயில் அண்டு கேஸ் நிறுவனத்தின், இயற்கை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துதல் திட்டம் மற்றும் எக்ஸ்னோரா இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 17.8 லட்சம் ரூபாய் செலவில், 4,080 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குளம் சீரமைப்பு பணி கடந்த பிப்., மாதம் துவங்கியது.
இதில், குளம் முழுதும் துார்வாரப்பட்டு, படிகள், சுற்றுச்சுவருடன் கம்பி வலை என, குளம் முழுதும் சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட குளத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், பெட்ரோபாக் நிறுவன துணை பொது மேலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். எக்ஸ்னோரா நிறுவன நிர்வாகி மோகன் முன்னிலை வகித்தார். சீரமைக்கப்பட்ட குளம் கோவில் அறங்காவலர் நல்லப்ப நாராயணனிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, குளக்கரையை சுற்றிலும், காஞ்சி அன்னசத்திரம், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு சார்பில், மரக்கன்றுகள் நடப்பட்டன.