Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பயிர்க்கடன் கோப்பு மாயமான 148 விவசாயிகளுக்கு நிம்மதி! * கடன் பெறலாம் என கூட்டுறவு துறை பச்சைக்கொடி

பயிர்க்கடன் கோப்பு மாயமான 148 விவசாயிகளுக்கு நிம்மதி! * கடன் பெறலாம் என கூட்டுறவு துறை பச்சைக்கொடி

பயிர்க்கடன் கோப்பு மாயமான 148 விவசாயிகளுக்கு நிம்மதி! * கடன் பெறலாம் என கூட்டுறவு துறை பச்சைக்கொடி

பயிர்க்கடன் கோப்பு மாயமான 148 விவசாயிகளுக்கு நிம்மதி! * கடன் பெறலாம் என கூட்டுறவு துறை பச்சைக்கொடி

ADDED : ஜூலை 13, 2024 09:33 PM


Google News
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் வேளாண் கூட்டுறவு வங்கியில், பயிர்க்கடன் கோப்புகள் மாயமான விவகாரத்தில், 148 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க முடியாமல் இருந்த நிலையில், அவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, மீண்டும் கடன் வழங்குவதாக வங்கி நிர்வாகம் தெரிவிக்கிறது. இதனால், நான்கு ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தொகையை 2021ல், அப்போதைய முதல்வர் பழனிசாமி தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுதும், 16 லட்சம் விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் வேளாண் கூட்டுறவு வங்கியில், பயிர்க்கடன் பெற்றிருந்த, 148 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படாமல் இருந்தது.

வங்கியில் இருந்த கடன் கோப்புகள் மாயமானதால், இந்த விவகாரம் பெரிதானது. கடன் தள்ளுபடி சான்று கிடைக்காததால், விவசாயிகள் சிரமப்பட்டனர்.

கூட்டுறவு துறை அதிகாரிகள், துறை மேலிடத்திற்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கடன் பெற்றிருந்த ஒவ்வொரு விவசாயையும், நேரில் வரவழைத்து, அவர்களிடம் இருந்த ஆவணங்களை வைத்து, கூட்டுறவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்த பின், மாவட்ட பதிவாளர் அலுவலகம், இணை பதிவாளர் அலுவலகம் ஆகியோரிடமிருந்து, துறை பதிவாளருக்கு 148 விவசாயிகள் பற்றிய கடன் கோப்புகள் சென்றன.

இந்த, 148 விவசாயிகளுக்கு, 1.17 கோடி ரூபாய் தள்ளுபடி ஆகாமல் நிலுவையில் இருந்ததால், 2021ல் துவங்கிய இப்பிரச்னை, 2024ம் ஆண்டு வரை, நான்கு ஆண்டுகள் நீடித்தன. மீண்டும் கடன் பெற முடியாமல், விவசாயிகள் பலரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம், மீண்டும் 148 விவசாயிகளுக்கு கடன் வழங்க, கூட்டுறவுத் துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, மத்திய கூட்டுறவு வங்கி, கடந்த ஜூன் மாதம் அனுப்பிய சுற்றறிக்கையின்படி, 148 விவசாயிகளுக்கு மீண்டும் பயிர்க்கடன் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதன்மூலம், 148 விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, முதற்கட்டமாக, 10 விவசாயிகளுக்கு, தலா 1.6 லட்ச ரூபாய் என, 10.6 லட்ச ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடன் பெறாத மீதமுள்ள 138 விவசாயிகளும், உரிய ஆவணங்களுடன், வாலாஜாபாத் கூட்டுறவு வங்கியில் தொடர்பு கொண்டு பயிர்க்கடன் பெறலாம் என, வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், நான்கு ஆண்டுகளாக நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, வேளாண் கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாலாஜாபாத் சுற்றியுள் 148 விவசாயிகளுக்கு, நிலுவையில் இருந்த பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக மத்திய கூட்டுறவு வங்கி அனுப்பிய சுற்றறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 10 விவசாயிகளுக்கு நாங்கள் பயிர்க்கடன் வழங்கியுள்ளோம்.

மீதமுள்ள விவசாயிகளும், சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெறலாம். பிணை ஏதும் இன்றி, 1.60 லட்ச ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us