/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஒரகடத்தில் பூட்டியே கிடக்கும் போலீஸ் உதவி மையங்கள் ஒரகடத்தில் பூட்டியே கிடக்கும் போலீஸ் உதவி மையங்கள்
ஒரகடத்தில் பூட்டியே கிடக்கும் போலீஸ் உதவி மையங்கள்
ஒரகடத்தில் பூட்டியே கிடக்கும் போலீஸ் உதவி மையங்கள்
ஒரகடத்தில் பூட்டியே கிடக்கும் போலீஸ் உதவி மையங்கள்
ADDED : ஜூன் 25, 2024 05:37 AM

ஸ்ரீபெரும்புதுார்,: ஒரகடம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 24 மணி நேரமும் பூட்டியே கிடக்கும், போலீஸ் உதவி மையங்களை திறக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 180க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரகடம் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
அதே போல, ஒரகடம், மாத்துார், வல்லக்கோட்டை, பண்ருட்டி, எறையூர், வைப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், பல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி, ஒரகடம் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.
தொழிற்சாலைகள் பெருக்கம் ஒரு பகுதி இருந்தாலும், அதே போல குற்றசம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் சிப்காட் சாலைகளில் நடந்து செல்லும், வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து, பைக்கில் வரும் மர்ம நபர்கள், அவர்களை கத்தி, இரும்பு கம்பியால் தாக்கி, அவர்களிடமிருந்து மொபைல் போனை பறித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க, ஒரகடம் மேம்பாலத்தின் கீழ், போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டது. ஒரகடம் சந்திப்பில் இருந்து, மற்ற சிப்காட் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடக்கும் இடங்களுக்கு அங்கிருந்து போலீசார் செல்லலாம்.
அதே போல, வட்டம்பாக்கம் செல்லும் சாலையில் பனப்பாக்கம் பகுதியில், போலீஸ் உதவி மையம் உள்ளது. தற்போது, இந்த இரண்டு போலீஸ் உதவி மையங்களும் ஒராண்டிற்க்கு மேலாக செயல்படாமல் உள்ளது. 24 மணி நேரமும் பூட்டியே கிடக்கும் இந்த போலீஸ் உதவி மையங்களால், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் வழிப்பறி, மொபைல் போன் பறிப்பு அச்சத்துடன் செல்கின்றனர்.
அதே போல, போலீஸ் உதவி மையங்களில் போலீசார் இல்லாததால், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் போது, போலீஸ் நிலையத்தில் இருந்து, நிகழ்விடத்திற்கு போலீசார் வருவதற்குள் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர்.
எனவே, போலீஸ் உதவி மையங்களில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட, மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.