/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரத்திற்கு புதிய பஸ் நிலையம் அமைவதில்...புது சிக்கல்: அறக்கட்டளை தொடர்ந்த வழக்கால் இடைக்கால தடை காஞ்சிபுரத்திற்கு புதிய பஸ் நிலையம் அமைவதில்...புது சிக்கல்: அறக்கட்டளை தொடர்ந்த வழக்கால் இடைக்கால தடை
காஞ்சிபுரத்திற்கு புதிய பஸ் நிலையம் அமைவதில்...புது சிக்கல்: அறக்கட்டளை தொடர்ந்த வழக்கால் இடைக்கால தடை
காஞ்சிபுரத்திற்கு புதிய பஸ் நிலையம் அமைவதில்...புது சிக்கல்: அறக்கட்டளை தொடர்ந்த வழக்கால் இடைக்கால தடை
காஞ்சிபுரத்திற்கு புதிய பஸ் நிலையம் அமைவதில்...புது சிக்கல்: அறக்கட்டளை தொடர்ந்த வழக்கால் இடைக்கால தடை
ADDED : மார் 11, 2025 09:00 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திற்கு புதிதாக புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, பொன்னேரிக்கரையில் 19 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்ட நிலையில், தனியார் அறக்கட்டளை நிர்வாகம் தொடர்ந்த வழக்கால், நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், புதிய பேருந்து நிலையம் அமைவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், 60 ஆண்டுகளுக்கு முன்பாக, 7 ஏக்கரில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் இப்போது பயன்பாட்டில் உள்ளது. இங்கு, தினம் 300 பேருந்துகள் வந்து செல்கின்றன.
பேருந்து நிலையம் உள்ளேயே பணிமனை, கடைகளின் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், இட நெருக்கடி அதிகரித்தது.
மேலும், பேருந்துகள் நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, ரெட்டை மண்டபம், ராஜவீதிகள், காமராஜர் சாலை போன்ற இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
தவிர, தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு, நேரடி பேருந்து வசதியில்லை.
இதனால், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை, 10 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, அப்போதைய முதல்வர் பழனிசாமி, 2017ல் அறிவிப்பு வெளியிட்டார்.
தொடர்ந்து கீழ்கதிர்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பேருந்து நிலையத்துக்கு இடம் தேர்வு செய்த பிறகும், நிலத்தை கையகபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
அதன்பின், அண்ணா பல்கலை கல்லுாரி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இழப்பீடாக, 26 கோடி ரூபாய் வழங்க, அரசு தயாராக இல்லாததால், அந்த முடிவும் கைவிடப்பட்டது.
இதையடுத்து, தனியார் அறக்கட்டளை இடத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், நிலத்தை வழங்க விருப்பமில்லாத பக்தவத்சலம் அறக்கட்டளை நிர்வாகம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அந்த நிலத்தையும் தற்போதைக்கு எடுக்க முடியாமல் போனது.
அதே அறக்கட்டளை நிர்வாகத்தின் அனுபவத்தில் உள்ள வேறு ஒரு இடத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது.
அதன்படி, பொன்னேரிக்கரையில் காஞ்சிபுரம் நுழைவாயிலில் உள்ள 19 ஏக்கர் நிலம், அரசுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
தனியார் அறக்கட்டளை பயன்படுத்தி வந்த இந்த இடத்தில், பேருந்து நிலையம் அமைக்க, கலெக்டர் கலைச்செல்வி சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் அமைவது உறுதி செய்யப்பட்டதாக, அனைத்து தரப்பினரும் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், கலெக்டரின் இந்த உத்தரவை எதிர்த்து, அறக்கட்டளை நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளது.
மேலும், இவ்வழக்கில் கலெக்டரின் உத்தரவுக்கு இடைக்கால தடையும் அறக்கட்டளை நிர்வாகம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், 'டெண்டர்' பணிகளை நோக்கி சென்ற புதிய பேருந்து நிலைய பணி, மீண்டும் தாமதம் ஆகியுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொன்னேரிக்கரையில் உள்ள போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலையோரம் உள்ள, பக்தவத்சலம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை பேருந்து நிலையம் அமைக்க கையகப்படுத்த முயன்றபோது, அறக்கட்டளை நிர்வாகத்தினர் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றனர்.
அந்த இடத்தை விடுத்து, எதிரே உள்ள அரசு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அந்த இடத்திற்கும், அதற்காக கொடுக்கப்பட்ட நோட்டீஸ்க்கு என, மேலும் இரு வழக்குகள், அறக்கட்டளை நிர்வாகம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மொத்தம் மூன்று வழக்குககள் ஒரே விவகாரமாக இருப்பதால், மூன்று வழக்குகளையும் சேர்த்தே நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
இதில், இடைக்கால தடையை நீக்க நாங்கள் மனு செய்துள்ளோம். விரைவில் அதற்கான விசாரணை நடக்கும்.
பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கிய 19 ஏக்கர் நிலம் அரசு நிலம் என்பதில் அனைத்து ஆவணங்களும் தெளிவாக இருப்பதால், தீர்ப்பு சாதமாகி, பேருந்து நிலைய பணி விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.