/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி திருவீரட்டானேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் காஞ்சி திருவீரட்டானேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
காஞ்சி திருவீரட்டானேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
காஞ்சி திருவீரட்டானேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
காஞ்சி திருவீரட்டானேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 03, 2024 05:05 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் காமராஜர் நகர், அப்பாராவ் தெருவில், திருவீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மாதம் 31ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 9:30 மணிக்கு கலசம் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், கோவில் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து, கணபதி, திருவீரட்டானேஸ்வரர், நான்கு வேத லிங்கங்கள் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழாவில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசியதாவது:
காமாட்சி, மீனாட்சி, அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட பெரிய கோவில்களில் கும்பாபிஷேகங்களை மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ெஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் நடத்தி உள்ளனர். அதேபோல, சிறிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளனர்.
அவர்கள் காட்டிய வழியில் நாமும் பல சிறிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி வருகிறோம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரானது சங்கர மடத்தால் செய்து கொடுக்கப்பட்டது. 60 கிராமத்து மக்கள் பயன் பெறும் வகையில், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் உருவாக சங்கர மடம் பல முயற்சிகளை செய்துள்ளது.
வெளியூர் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக காஞ்சிபுரத்தில் யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ஆதிசங்கரரும் திருவீரட்டானேஸ்வரர் கோவில் சிறப்பை சிவானந்த லஹரி என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை சென்னை மகாலட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் மகாலட்சுமி சுப்பிரமணியன் தலைமையில், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.