/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'கோவில் நில ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் வெளியிட வேண்டும்' ; பக்தர்கள் கோரிக்கை 'கோவில் நில ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் வெளியிட வேண்டும்' ; பக்தர்கள் கோரிக்கை
'கோவில் நில ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் வெளியிட வேண்டும்' ; பக்தர்கள் கோரிக்கை
'கோவில் நில ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் வெளியிட வேண்டும்' ; பக்தர்கள் கோரிக்கை
'கோவில் நில ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் வெளியிட வேண்டும்' ; பக்தர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 20, 2024 03:19 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 642 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு பராமரிப்பு, வருவாய், பூஜை என, பல்வேறு காரணங்களுக்காக, கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
கோவில் நிலங்களில் குடிபெயர்ந்த வாடகைதாரர்கள், கோவிலுக்கு முறையான வாடகை செலுத்தாமல், பலரும் அலட்சியம் காட்டுகின்றனர்.
எனவே, வாடகை பாக்கி வைத்திருப்போர் விபரங்களை, கோவில் வாசலில் பெயர் பலகையில் எழுதி வைக்கும் நடைமுறை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே துவக்கப்பட்டது.
இந்த நடைமுறை பலன் அளித்ததால், அறநிலையத்துறை அதிகாரிகள் அடிக்கடி இம்முறையை பயன்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே, காஞ்சிபுரத்தில் உள்ள பல கோவில்களில், சமீபத்தில் கூட வாடகை பாக்கி விபரங்கள் அடங்கிய பதாகையை கோவில் வாசலில் வைத்தனர்.
இதை பார்க்கும் வாடகைதாரர்கள் பலரும், சமுதாயத்தில் சங்கடமாக உணர்ந்ததால், தங்களின் பாக்கி தொகையை செலுத்தினர். அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கைகொடுத்த இத்திட்டம் போல், கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்போரின் விபரங்களையும், கோவில் வாசலில் வைக்க வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான ஏராளமான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
அந்த நிலங்களில், 'இது கோவில் நிலம்; ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என பேனர் அல்லது அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
தமிழகத்தில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் தொய்வாக நடக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நடவடிக்கையை சிக்கலாக்குகின்றனர்.
இருப்பினும், வழக்கை சந்தித்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும். பக்தர்கள் கோவில் பயன்பாட்டுக்கு கொடுத்த நிலங்கள் பல கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது.
கோவில் நில ஆக்கிரமிப்பு நிலங்களில் பேனர் அல்லது அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் சமூக விரோதிகள் கோவில் நிலங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.