Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ரேஷன் கார்டு கேட்டு 7,900 பேர் காத்திருப்பு: ஒரு வாரத்தில் விசாரணை முடிக்க திட்டம்

ரேஷன் கார்டு கேட்டு 7,900 பேர் காத்திருப்பு: ஒரு வாரத்தில் விசாரணை முடிக்க திட்டம்

ரேஷன் கார்டு கேட்டு 7,900 பேர் காத்திருப்பு: ஒரு வாரத்தில் விசாரணை முடிக்க திட்டம்

ரேஷன் கார்டு கேட்டு 7,900 பேர் காத்திருப்பு: ஒரு வாரத்தில் விசாரணை முடிக்க திட்டம்

ADDED : ஜூலை 08, 2024 05:23 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, ஐந்து தாலுகாவிலும், 634 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகள் கீழ், 4 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், புதியதாக திருமணமான அல்லது கூட்டு குடும்பத்திலிருந்து தனிக்குடித்தனம் சென்ற குடும்பத்தினருக்கு புதிய ரேஷன் கார்டு தேவைப்படுவதால், பலரும் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

கடந்த 2023ம் ஆண்டு, செப்.15ம் தேதி, தமிழகம் முழுதும், மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு துவக்கியது. இத்திட்டம் துவங்குவதற்கு முன்பாகவே புதிதாக ரேஷன் அட்டை வழங்கும் பணிகளை, தமிழக அரசு நிறுத்தியதால், ஒராண்டிற்கு மேலாக, புதிய ரேஷன் கார்டுக்கு ஆயிரக்கணக்கான பயனாளிகள் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் முதல், ஜூன் முதல் வாரம் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், புதிய ரேஷன் காட்டு வழங்க முடியாத நிலை நீடித்தது.

இந்நிலையில், புதிய அட்டை கேட்டு விண்ணப்பம் செய்த பயனாளிகளுக்கு, ரேஷன் கார்டு வழங்குவதற்கு தேவையான விசாரணையை, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என, பொது வினியோக திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விண்ணப்பம் செய்தவர்களின் உண்மை தன்மை குறித்து, ஒரு வாரத்தில் விசாரணை முடித்து, உணவுத் துறை கமிஷனருக்கு அறிக்கை அளிக்க வேண்டும எனவும் காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து தாலுகாவிலும், ஒராண்டாக புதிய ரேஷன் அட்டை கேட்டு, 7,900 பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இவர்களின் விண்ணப்பம் மீதான விசாரணை அடுத்த ஒரு வாரத்தில் முடித்து, புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பொது வினியோக திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும், 7,900 பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களின் விண்ணப்பம் மீது, 7 வகையில் கூர்ந்து விசாரணை நடத்த, துறை மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

கூட்டு குடும்பத்திலேயே இருந்து விண்ணப்பம் செய்துள்ளனரா அல்லது ஒரே ரேஷன் கடையின் கீழ் உள்ள பகுதியில் வசிக்கின்றனா அல்லது ஒரு கி.மீ.,துாரத்திற்குள் தனியாக வசிக்கின்றனரா என, ஆய்வு செய்ய சொல்லியிருக்கின்றனர்.

மகளிர் உரிமை தொகை காரணமாக, சிலர் தற்காலிகமாக தனிக்குடித்தனம் சென்று, புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். ஒரே குடும்பத்தில் இருந்தவாறு தனி ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர்.

ஒரே வீட்டில் இருந்தாலும், தனி சமையல் அறை இருந்தால், தகுதியானவர் என ஏற்க முடியும். ஆனால், ஒரே குடும்பத்தில் கூட்டு குடும்பத்தில் இருப்போர், தனித்தனியாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர். அதுபோன்ற விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

விண்ணப்பங்கள் மீதான விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடித்து, கமிஷனருக்கு அறிக்கை அளிப்போம். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏற்கனவே பெரும்பாலான விண்ணப்பங்கள் மீதான விசாரணையை முடித்துள்ளோம்.

இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம். அதன்பின், புதிய ரேஷன் அட்டை அச்சடிக்கும் பணிகளுக்கு, துறை மேலிடம் அனுமதி அளித்தவுடன், அச்சடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us