/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல் விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்
விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்
விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்
விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்
ADDED : ஜூன் 08, 2024 05:58 AM
சென்னை, : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, நேற்று முன்தினம் இரவு பயணியர் விமானம், சென்னை விமான நிலையம் வந்தது.
அதில் வந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், ஐந்து பேரின் நடவடிக்கை மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்களது உடைமைகளை பரிசோதித்தனர்.
இதில், ஐந்து பேரின் உள்ளாடைக்குள் இருந்து, ஆறு பெரிய தங்க செயின்கள், 10 பாக்கெட்களில் தங்க பசை மற்றும் 7 தங்க கட்டிகள் என, 6.168 கிலோ தங்கம் சிக்கியது. இதன் இந்திய மதிப்பு 3.91 கோடி ரூபாய்.
விசாரணையில் கடத்தி வந்த ஐந்து பேரும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சுற்றுலாவுக்காக துபாய் சென்றுவிட்டு, அங்கு சிலர் உதவியோடு தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. ஐந்து பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
35 விமான சேவை பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது.
இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவை பாதிக்கப்பட்டது.
கோலாலம்பூர், சிங்கப்பூர், கோவா, ஹைதராபாத், கோழிக்கோடு, திருச்சி, பெங்களூரு, மதுரை, கோல்கட்டா, டில்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 17 விமானங்கள் தரையிறங்க முடியாமல், 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்தன. அதன் பின் தரையிறக்கப்பட்டன.
சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, கோலாலம்பூர், சிங்கப்பூர், திருவனந்தபுரம் உட்பட பல நகரங்களுக்கு செல்ல வேண்டிய 18 விமானங்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக புறப்பட்டு சென்றன.
விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'இடைவிடாமல் மழை பெய்ததால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. மழை நின்ற பின், வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்பட்டன' என்றனர்.