/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/காய் முற்றும் பருவத்தில் உளுந்து செடிகள் கருகுகிறது: பருவ மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்காய் முற்றும் பருவத்தில் உளுந்து செடிகள் கருகுகிறது: பருவ மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
காய் முற்றும் பருவத்தில் உளுந்து செடிகள் கருகுகிறது: பருவ மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
காய் முற்றும் பருவத்தில் உளுந்து செடிகள் கருகுகிறது: பருவ மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
காய் முற்றும் பருவத்தில் உளுந்து செடிகள் கருகுகிறது: பருவ மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
ADDED : ஜன 04, 2024 06:07 AM

தியாகதுருகம்: மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள மானாவாரி உளுந்து செடிகள் காய் முற்றும் பருவத்தில் தண்ணீர் இன்றி கருகுவதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் கவலையோடு காத்திருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மானாவரி நிலங்களில் உளுந்து அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை, வடை தயாரிப்புக்கு உளுந்து பயன்படுத்தப்படுவதால் இதற்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கிறது. அக்., மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதும் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இயற்கை மழையின் உதவியோடு 90 நாட்களில் வளர்ந்து அறுவடைக்கு தயாராகிறது. அதிக மழை, வறட்சி, பனி ஆகியவற்றை தாக்குப்பிடித்து வளரும் தன்மை கொண்டது.
இருப்பினும் தொடர் கன மழை மற்றும் நீண்ட நாள் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்படும் போது மகசூல் பெருமளவு குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது.
இவ்வாண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 95 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உளுந்துார்பேட்டை, திருநாவலுார், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், தியாகதுருகம் ஆகிய பகுதியில் அதிகளவில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த 2015 மற்றும் 2022 ம் ஆண்டுகளில் அறுவடை நேரத்தில் பெய்த கன மழையால் உளுந்து வயலில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகி கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் 2018 ம் ஆண்டு பருவ மழை பெய்யாமல் ஏமாற்றியதால் உளுந்து பயிர்கள் தண்ணீரின்றி கருகின.
பருவநிலை மாறுபாடு காரணமாக கன மழை மற்றும் மழை பெய்யாமல் பொய்த்துப் போவது ஆகிய காரணங்களால் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மாவட்டத்தில் உளுந்து பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுகின்றன. காய் முற்றும் தருணத்தில் மழையை எதிர்பார்த்த விவசாயிகள் இதுவரை ஏமாற்றம் அடைந்துள்ளனர். வட மற்றும் தென் மாவட்டங்களில் அதி கன மழை பெய்த போதும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனது.
வடகிழக்கு பருவ மழை இன்னும் ஒரு சில தினங்கள் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் கடைசி நேரத்தில் மழை பெய்து கை கொடுக்கும் என்று எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இருப்பினும் பல இடங்களில் வறட்சியை தாங்க முடியாமல் உளுந்து பயிர்கள் பிஞ்சு முற்றுவதற்கு முன்பே கருகி காய்ந்து விட்டன. இதனால் இவ்வாண்டு உளுந்து பயிரிட்டவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்வதற்கான போதிய விழிப்புணர்வு இன்னும் விவசாயிகளுக்கு எட்டவில்லை. உளுந்து சாகுபடி செய்த சிறு குறு விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தண்ணீரின்றி கருகிய உளுந்து பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.