/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைகள்... விரிவுபடுத்தப்படுமா? மாவட்டம் ஆகியும் வளர்ச்சி இல்லைகள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைகள்... விரிவுபடுத்தப்படுமா? மாவட்டம் ஆகியும் வளர்ச்சி இல்லை
கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைகள்... விரிவுபடுத்தப்படுமா? மாவட்டம் ஆகியும் வளர்ச்சி இல்லை
கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைகள்... விரிவுபடுத்தப்படுமா? மாவட்டம் ஆகியும் வளர்ச்சி இல்லை
கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைகள்... விரிவுபடுத்தப்படுமா? மாவட்டம் ஆகியும் வளர்ச்சி இல்லை
ADDED : ஜூலை 16, 2024 11:32 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சியின் எல்லைப் பகுதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2019ம் ஆண்டு நவ., 26ம் தேதி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்ட துவக்க விழாவில், கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ரிங் ரோடு உள்ளிட்ட வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
உடனடியாக திட்டங்கள் அனைத்தும் துவங்கி, மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சியின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும் என்று நினைத்திருந்த மக்களின் எண்ணம் வெறும் கானல் நீராக ஆனது. வீரசோழபுரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் இடத்தில், ரூ.104 கோடி மதிப்பில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் கடந்த 2020ம் ஆண்டு துவங்கியது. பேஸ்மென்ட் அளவிலான பணிகள் முடிந்த நிலையில், ஐகோர்ட் தடை விதித்ததால் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் முடங்கியது.
அதேபோல் ரிங் ரோடு திட்டமும் துவங்கப்படாமலேயே இழுபறி நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், கச்சிராயபாளையம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், உலகங்காத்தான் தனியார் கல்லுாரி கட்டடத்தில் எஸ்.பி., அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன.
இதனால் கள்ளக்குறிச்சி நகரம் குறுகிய இடத்தில் அதிகப்படியான மக்கள் தொகை வசிக்கும் பகுதியாக மாறி உள்ளது. அத்துடன் இங்குள்ள சாலைகள், கழிவுநீர் கால்வாய், குடிநீர் அமைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன், பேரூராட்சியின் தரத்திலேயே தற்போது வரை இருந்து வருகிறது.
இதனால் நகரில் உள்ள 4 முக்கிய சாலைகளை ஒட்டியவாறு, கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம், ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லுாரிகள் அனைத்தும் குறுகலான இடங்களில் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன.
பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மாவட்ட தலைநகரமாகியும் விரிவாக்கம் செய்யப்படாமல், பேரூராட்சி தரத்திலேயே கள்ளக்குறிச்சி நகரின் வசதிகள் இருந்து வருகின்றன. 100 ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட கட்டடங்களிலேயே தற்போது வரை பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கும் நிலை உள்ளது.
கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் போதிய இடமில்லை என்பதால், மாவட்ட அலுவலகங்கள் அனைத்தும் அடுத்தடுத்து உள்ள வேறு இடங்களுக்கு மாற்றம் பெற்று வருகின்றன.
எனவே தற்போதுள்ள கள்ளக்குறிச்சியின் நகரின் எல்லைப்பகுதியை அருகில் உள்ள க.மாமனந்தல், சிறுவங்கூர், பெருவங்கூர், வி.பாளையம், மாடூர், நீலமங்கலம், நிறைமதி, தென்கீரனுார், தச்சூர், பொற்படாக்குறிச்சி, உலகங்காத்தான், காரனுார், குதிரைச்சந்தல், நல்லாத்துார், மட்டிகைக்குறிச்சி, சடையம்பட்டு, மோகூர், மோ.வன்னஞ்சூர், சோமண்டார்குடி, அரியபெருமானுார், ரங்கநாதபுரம் உள்ளிட்ட 7 கி.மீ., தொலைவிற்குள் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைத்து நகராட்சியின் பரப்பளவை விரிவுபடுத்திட வேண்டும்.
இதனால் தற்போது ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட கள்ளக்குறிச்சி நகராட்சியின் மக்கள் தொகை 2 லட்சம் ஆக உயரக்கூடும்.
அத்துடன் குறுகிய பகுதிகளில் இடவசதியின்றி தவிக்கும் மக்கள் நிம்மதி அடைவர். எனவே, சுற்றுப்புற கிராமங்களை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி நகராட்சியின் எல்லைப்பரப்பை விரிவுபடுத்த வேண்டும்.