/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தென்பெண்ணையாறு வறண்டதால் விவசாயிகள் கவலை! நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அபாயம்தென்பெண்ணையாறு வறண்டதால் விவசாயிகள் கவலை! நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
தென்பெண்ணையாறு வறண்டதால் விவசாயிகள் கவலை! நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
தென்பெண்ணையாறு வறண்டதால் விவசாயிகள் கவலை! நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
தென்பெண்ணையாறு வறண்டதால் விவசாயிகள் கவலை! நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
ADDED : ஜூன் 19, 2024 11:03 PM
திருக்கோவிலுார் : தென்பெண்ணை ஆறு வறண்டதால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலையில் உருவெடுத்து, தமிழக எல்லையான கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் வழியாக 430 கிலோ மீட்டர் பயணித்து வங்க கடலில் கலக்கிறது.
இதன் குறுக்கே தமிழக எல்லையில் கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., சாத்தனுார் அணைகள் உள்ளன.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பெங்களூரு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக தென்பெண்ணையில் பெருக்கெடுக்கும் வெள்ளம், கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., சாத்தனுார் அணைகள் நிரம்பி, பிக்கெப், திருக்கோவிலுார், எல்லீஸ், சொர்ணாவூர் தடுப்பணைகளை தாண்டி வங்கக் கடலில் சென்று கலக்கிறது.
இதனிடையே கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள இந்த தடுப்பணைகளில் இருந்து கால்வாய்களுக்கு பிரித்து அனுப்பப்படும் தண்ணீரின் மூலம் ஏரிகள் நிரம்பி பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை துவங்கியது முதல் பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடக மாநிலத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பணைகளாலும், தமிழக எல்லையில் இருக்கும் அணைகளுக்கான நீர்வரத்து முற்றிம் குறைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட மக்களின் உயிர்நாடியாக இருக்கும் சாத்தனுார் அணையின் நீர்மட்டம் மிகக் குறைவாகவே உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி 7,321 மில்லியன் கொள்ளளவு கொண்ட அணையில், 1,679 மில்லியன் கன அடி மட்டுமே நீர் உள்ளது. இது குடிநீர் தேவை, மீன் வளர்ப்பு, பூங்காவிற்கான தேவைகளை மட்டுமே நிறைவு செய்வதாக உள்ளது.
வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் சாத்தனுார் அணை பெரும்பாலும் நிரம்பிவிடும் சூழலில், அதன்பிறகு தென்பெண்ணையில் தொடர்ச்சியாக நீர் வரத்து இருக்கும். சில நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கிவிடும். எனவே தொடர்ந்து ஆறு மாதத்திற்கு மேல் தென்பெண்ணையில் நீர் வரத்து இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இல்லாததால் சாத்தனுார் அணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால் தென்பெண்ணை வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு தென்பெண்ணையிலிருந்து தான் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
தென்பெண்ணை வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வரும் நாட்களில் மழை பெய்து தென்பெண்ணையில் தண்ணீர் வரவில்லை என்றால் நிலத்தடி நீர்மட்டம் மேலும், குறைந்து மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகும். இதனால், விவசாயிகள் மட்டுமல்லாது பொது மக்களும் தென்பெண்ணை வறண்டு கிடப்பதை பார்த்து கவலையடைந்துள்ளனர்.