பள்ளி மாணவி மாயம்
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த பூசப்பாடியைச் சேர்ந்தவர் பெரியசாமி. பிளஸ் 1 படித்து வரும் இவரது மகளைக் கடந்த 21ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாமியார் தாக்கு: மருமகள் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி பார்வதி, 43; இவர், தனது மகன் முத்துகருப்பனுக்கு வேறொரு நபரிடமிருந்து கடனாக பணம் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த 13ம் தேதி பாண்டியங்குப்பத்தில் உள்ள தனது மகன் முத்துகருப்பனிடம் பணத்தை கேட்கச் சென்றார்.
அரசு பஸ் டிரைவருக்கு மிரட்டல்
கள்ளக்குறிச்சி: நல்லாத்தார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி, 57; அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த 23ம் தேதி காலை 9:00 மணிக்கு பசுங்காயமங்கலம் ரோடு அருகே பஸ்சை ஓட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி அகரத்தான்கொள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 50; லாரி டிரைவர். இவர் தனது லாரியை வேகமாக ஓட்டி வந்து பஸ்சின் குறுக்கே நிறுத்தியுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட ராஜாமணியை, திட்டி பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் லாரி டிரைவர் அண்ணாதுரை மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மனைவி பிரிவு; கணவர் தற்கொலை
கள்ளக்குறிச்சி: சிறுவங்கூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சவுந்தர், 32; இவர், இவரது மனைவி விஜயசாந்தி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் மனமுடைந்த சவுந்தர் கடந்த 21ம் தேதி இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லாரி மோதி விவசாயி பலி
உளுந்துார்பேட்டை: செம்பியன்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 38; விவசாயி. இவர், நேற்று காலை டிராக்டரை உளுந்துார்பேட்டையில் இருந்து எலவனாசூர்கோட்டை நோக்கி ஓட்டிச் சென்றார். 8:00 மணியளவில் ஏ.குமாரமங்கலம் அருகே சென்றபோது கடலுார், குண்டுஉப்பலவாடி பகுதியை சேர்ந்த இளையகங்கை; 33; என்பவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரி டிராக்டர் மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மகள் மாயம்: தாய் புகார்
கச்சிராயபாளையம்: பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவரது 19 வயது மகள் தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவரை கடந்த 22ம் தேதி காலை கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.