Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய கோவில்கள் இடித்து அகற்றம்

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய கோவில்கள் இடித்து அகற்றம்

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய கோவில்கள் இடித்து அகற்றம்

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய கோவில்கள் இடித்து அகற்றம்

ADDED : ஜூன் 02, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இரு கோவில்கள் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சியில் பெரிய ஏரியில் இருந்து, காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட 36 கட்டடங்களை அகற்ற சென்னை ஐகோர்ட் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகள் கடந்த 16ம் தேதி, ஆக்கிரமிப்பு கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டி, மின் இணைப்புகளை துண்டித்தனர். அதனையொட்டி, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தாமாகவே கட்டடங்களை இடித்து அகற்றினர்.

கடந்த மே 28ம் தேதி பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு டீக்கடை, இரண்டு மருந்து கடைகளை இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் 10 கடைகள் மட்டும் இடிக்கப்படவில்லை.

இந்நிலையில், காந்தி ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா கோவில்கள் அகற்றப்படுவதாக நேற்று முன்தினம் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது.

இதில் சக்தி விநாயகர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆர்ப்பாட்டம்


தொடர்ந்து கோவில்களை இடித்து அகற்றும் பணி நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது. அப்போது, அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சுவாமி சிலைகளை அகற்ற கால அவகாசம் கேட்டனர். மேலும், கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறி கோவிலுக்குள் அமர்ந்தனர். காலஅவகாசம் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுத்ததை தொடர்ந்து, கோவிலினுள் அமர்ந்திருந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

தொடர்ந்து, இந்து முன்னணி, பா.ஜ., மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர்.

சிலைகள் அகற்றம்


தொடர்ந்து, சக்தி விநாயகர் கோவிலில் இருந்த (கல்-6, உலோகம்-3) 9 சுவாமி சிலைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். சிலைகளின் உயரம், அகலம், எடை ஆகியவற்றை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மினி டெம்போவில் ஏற்றி, பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். சுவாமிக்கு சாற்றப்படும் வெள்ளி கவசங்கள், மணி உள்ளிட்ட உபகரணங்களை கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல், தர்மசாஸ்தா கோவிலில் இருந்த சுவாமி சிலைகள் அகற்றப்பட்டு, கோவில் நிர்வாகத்தினர் எடுத்துச் சென்றனர்.

கோவில் இடிப்பு


தொடர்ந்து, நேற்று மதியம் 1:00 மணியளவில் 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சக்தி விநாயகர் கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது.

அப்போது, ஆர்.டி.ஓ., லுார்துசாமி, தாசில்தார் பிரபாகரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொறுப்பு) நாகராஜ், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மோகன், நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் விஜயகுமார், பிரசாத், மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். டி.எஸ்.பி., தேவராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போக்குவரத்து மாற்றம்


கோவில்கள் இடிப்பு பணியையொட்டி, கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் நோக்கி சென்ற வாகனங்களை மவுண்ட்கார்மல் கரியப்பா நகர் வழியாக திருப்பி விடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us