ADDED : ஜூன் 07, 2024 12:10 AM
ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்த சந்திரன் மகள் பிரியா, 26; சித்தோடு, சி.எம்.நகரை சேர்ந்தவர் கவின், 29, கட்டட தொழிலாளி.
காதலித்த இவர்கள், இருவீட்டார் சம்மதத்துடன், 2019ல் திருமணம் செய்தனர். ஒரு மகள், மகன் உள்ளனர். பி.பெ.அக்ரஹாரம் நஞ்சப்பா நகரில் குடும்பத்துடன் கவின் வசிக்கிறார். கவினுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த, 1ம் தேதி போதையில், வீட்டில் அவரது தம்பியுடன் தகராறில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் வீட்டு உரிமையாளர் கவினிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். கணவனின் குடிப்பழக்கத்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதே என்ற வேதனையில், பிரியா வீட்டில் சேலையால் துாக்கிட்டு கொண்டார். மனைவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கவின் கொண்டு சென்றார். அங்கிருந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் ஈரோடு ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.