ADDED : ஜூன் 28, 2024 01:48 AM
திருப்பூர், 'சைபர் கிரைம்' தொடர்பான விழிப்புணர்வு வீடியோ உருவாக்கி, மாநில அளவில் முதலிடத்தை திருப்பூர் மாநகர போலீசார் பெற்றனர்.
மாநில அளவில் விழிப்புணர்வு வீடியோ தயார் செய்வதற்கான போட்டியை கூடுதல் டி.ஜி.பி., அருண் சமீபத்தில் மாநகர போலீசாருக்கு ஏற்பாடு செய்தார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 'சைபர் கிரைம்', பொருளாதார குற்றம் மற்றும் போக்குவரத்து என, நான்கு தலைப்பின் கீழ், இரண்டு நிமிடம் விழிப்புணர்வு வீடியோ உருவாக்க அறிவுறுத்தப்பட்டது. இதில், கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என, ஆறு மாநகர போலீசார் பங்கேற்றனர்.
'சைபர் கிரைம்' தலைப்பில், திருப்பூர் 'சைபர் கிரைம்' போலீசார் முதலிடம்; 'பொருளாதாரக் குற்றம்' தலைப்பில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாமிடம் பிடித்தனர்.
முதலிடத்துக்கு, 1.25 லட்சம் ரூபாய்; இரண்டாமிடத்துக்கு, 75 ஆயிரம் ரூபாய் பரிசுதொகை வழங்கப்பட உள்ளது. 'சைபர் கிரைம்' தலைப்பில், பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறு சொல்லி ஏமாற்றப்படுவது தொடர்பாகவும், 'பொருளாதார குற்றம்' தலைப்பில், சீட்டு மோசடி தொடர்பாகவும் இரண்டு நிமிடங்களை கொண்ட வீடியோவை திருப்பூர் மாநகர போலீசார் தயாரித்திருந்தனர்.
வீடியோக்களை தயார் செய்து, வெற்றி வாகை சூடிய சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், போலீசாரை கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு பாராட்டியுள்ளார்.