Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

ADDED : ஜன 05, 2024 10:54 AM


Google News
எல்லை மாகாளியம்மன்

கோவிலில்

பொங்கல் விழா

சென்னிமலை நகரின் எல்லையில், காங்கேயம் பிரதான சாலையில், காவல் தெய்வமாக விளங்கும், எல்லை மாகாளியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 27ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. காலை முதலே நுாற்றுக்கணக்கான மக்கள் கோவில் வளாகத்தில் ஆடு, கோழி பலியிட்டும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர். இன்று மறு பூஜை, மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

'பவானியில் 12 இடங்களில்

௩வது கண் கண்காணிக்கும்'

பவானி நகராட்சி, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்கம் சார்பில், பவானி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அம்மா உணவகம், குமாரபாளையம்-பவானி இணைப்பு பாலம், ஆட்டோ ஸ்டாண்ட், அரசு மற்றும் தனியார், நகர, புறநகர் பஸ் நிறுத்துமிடம் உள்பட, 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்தது. இவை நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் சிந்துாரி, தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், வியாபாரிகள் சங்க தலைவர் தனபால், செயலாளர் மாணிக்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ--மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. மூன்று பிரிவுகளாக படைப்புகள் இடம் பெற்றன.

முதல் பிரிவில் இரு மாணவர் - ஒரு வழிகாட்டு ஆசிரியர் குழு படைப்பு; இரண்டாவது பிரிவில் ஒரு மாணவர்- ஒரு வழிகாட்டி ஆசிரியர் கொண்ட படைப்பு; மூன்றாவது பிரிவில் ஆசிரியர்களுக்கான படைப்புகள் என, 180 படைப்புகள் இடம் பெற்றன.

முதல் இரண்டு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் படைப்புகள், கடலூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் மாநில அறிவியல் கண்காட்சிக்கு தகுதி பெறும் என்று, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

ரோஜா நகருக்கு அடிப்படை

வசதி வலியுறுத்தி தீர்மானம்

இந்திய கம்யூ., கட்சி நகர கிளை கூட்டம் சந்திரகலா தலைமையில் ஈரோட்டில் நடந்தது. தெற்கு மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, பாபு பேசினர். பெருந்துறை தாலுகா பெத்தாம்பாளையம் டவுன் பஞ்., 14வது வார்டில் அரசு புறம்போக்கு நிலத்தில் சொந்த வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்ட இடத்தில், ரோஜா நகர் அமைந்துள்ளது. அங்கு, 75 ஏழை தொழிலாளர்கள், 2006 முதல் வசிக்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். நிர்வாகிகள் மோகனசுந்தரி, தீபா, அம்மாசையம்மாள், மல்லிகா, லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தொட்டிகிணறில் ரூ.1.65 கோடியில் பாலம்

வெள்ளித்திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், கொளத்துார் ரோட்டில், ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 31.70 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறுபாலம் மற்றும் கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணிக்கு நேற்று பூஜை நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் பணிகளை துவக்கி வைத்தார்.

சென்னம்பட்டி அருகே முரளியில், ஜல் ஜீவன் திட்டத்தில், 16.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி; கொமராயனுார் அருகில் தொட்டிகிணறு பகுதியில், ௧.௯௫ கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் மறைவுக்கு

கட்சியினர் மவுன அஞ்சலி

தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் மறைவையொட்டி, சத்தியமங்கலத்தில் அனைத்து கட்சி சார்பில், மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது. கோட்டுவீரம்பாளையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பழைய பஸ் ஸ்டாண்ட் முன் ஊர்வலம் முடிந்தது. அங்கு விஜயகாந்த் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். தே.மு.தி.க., நிர்வாகிகள், 5 பேர் மொட்டை அடித்து கொண்டனர்.

அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா

கோபி அருகே அளுக்குளியில், செல்லாண்டியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் கொடியேற்று விழா மற்றும் அம்மை அழைப்பு நடந்தது.

முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று நடந்தது. அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீள குண்டத்தில், தலைமை பூசாரி செந்தில், காலை, 7:00 மணிக்கு பூஜை செய்து முதலில் இறங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அளுக்குளி, கோபிபாளையம், கணபதிபாளையம், செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருமகன் ஈவேராவுக்கு நினைவஞ்சலி

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. முன்னதாக பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்துக்கு, அனைவரும் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து பெரியார் மன்றத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. தமிழக காங்., துணைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர், திருமகனுக்கு அஞ்சலி செலுத்தி பேசினர்.

நிகழ்வில் காங்., முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், கவுன்சிலர் ஈ.பி.ரவி, காங்., மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் பாஷா மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

மக்களுடன் முதல்வர்

திட்ட முகாமில் 812 மனு

அனைத்து அரசு சேவைகளும், ஒரே இடத்தில் மக்களுக்கு கிடைக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், தமிழகத்தில் நடந்து வருகிறது. இதன்படி காங்கேயம் நகராட்சிக்கான, 1, 2, 5, 6, 7, 8 வார்டுகளுக்கான முகாம், காங்கேயத்தில் நடந்தது.

இதில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் மக்களிடம் இருந்து, 812 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், நகராட்சி கமிஷனர் கனிராஜ், காங்கேயம் நகர தி.மு.க., செயலாளர் சேமலையப்பன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பாரியூர் குண்டம் விழா

அதிகாரிகள் ஆலோசனை

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி தலைமையில், நேற்று மாலை நடந்தது. தாசில்தார் வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தார். போலீசார், தீயணைப்பு துறை, வருவாய், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 'சிசிடிவி' கேமரா பொருத்துவது, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி, வாகன போக்குவரத்து, பார்க்கிங் வசதி, சுகாதாரம், மின் இணைப்பு, போக்குவரத்து உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து, ஆர்.டி.ஓ., ஆலோசனை வழங்கினார்.

ஆசிரியர்கள்

ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் வட்டார தொடக்கக்கல்வி அலுவலகம் முன், ஆசிரியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் தலைமை வகித்தார். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட ௧0 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிளை தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். 15வது ஊதியக்குழு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

குருமந்துார் பூங்குழலி அம்மன்

கோவிலில் குண்டம் திருவிழா

நம்பியூரை அடுத்த குருமந்துார் பூங்குழலி அம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம், 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் நேற்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை பூசாரி கோபால், துணை பூசாரி கோகுல் முதலில் தீ மிதித்தனர். இதையடுத்து, 15 நாட்கள் விரதம் இருந்த குருமந்துார், நம்பியூர், மூணாம்பள்ளி, கடத்துார், எலத்துார் செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ரூ.37 கோடியில் சாலைப்பணி தொடக்கம்

நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஈரோடு - -காங்கேயம் நெடுஞ்சாலையில், திட்டுப்பாறை முதல் ஆலாம்பாடி வரை, 6 கி.மீ., துாரத்துக்கு, 37 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மேம்பாடு செய்யும் பணி, பரஞ்சேர்வழி ஊராட்சி நால்ரோடு பகுதியில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பணியை துவக்கி வைத்தார். காங்கேயம் உதவி கோட்ட பொறியாளர் தங்கவேல், உதவி பொறியாளர் முகிலா, காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கருணைபிரகாஷ், கவுன்சிலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுயம்பு மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்

ஈரோடு, சூரம்பட்டிவலசு சுயம்பு மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து கம்பம் ஊர்வலம் நேற்று காலை, 7:௦௦ மணிக்கு தொடங்கியது. கோவில் வளாகத்தில் நடப்பட்டிருந்த கம்பம் பிடுங்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள கிணற்றில் விடப்பட்டது. பெண்கள் ஒருவருக்கொருவர் முகத்தில் மஞ்சள் பூசி மகிழ்ந்தனர். இதையொட்டி சுயம்பு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை இரவு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

தாராபுரத்தில் பார்களில்

மது விற்பதாக புகார்

தாராபுரத்தில் பார்களில் நடக்கும், சட்ட விரோத மது விற்பனையை தடுக்ககோரி, மதுவிலக்கு போலீசில் பா.ஜ.,வினர் புகார் செய்தனர்.

தாராபுரம் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனில், நகர தலைவர் சதீஷ், இளைஞரணி தலைவர் வினீத் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தாராபுரம் நகரில் உரிய அனுமதியின்றி, பல பார்கள் இயங்குகிறது. அதில், சட்ட விரோதமாக மது விற்பனையும் நடக்கிறது. மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

சிவன்மலையில் இடிந்த கோவில் சுவர்

சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்

காங்கேயம் அருகே சிவன்மலை அடிவாரத்தில், வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், தைப்பூச திருவிழா சிறப்பாக நடக்கிறது.

கோவிலின் சுற்றுச்சுவர் ஆறு மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது. பின்புற கதவும் சேதமாகி உள்ளது. ஆனால், இன்னும் சரி செய்யப்படவில்லை. நடப்பாண்டு தைப்பூச விழா, ௨௦ நாட்களில் நடக்கவுள்ளது.

வீரபாகு கோவில் திருவிழாவும் நடக்கவுள்ள நிலையில், ஆறு மாதங்களாக கண்டு கொள்ளாமல் உள்ளனர். சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் உடனடியாக கோவில் சுவரை புதுப்பிக்க வேண்டும் என்று, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us