2,௦௦௦ டன் நெல் வருகை
ஈரோடு: விருத்தாசலத்தில் இருந்து ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு, சரக்கு ரயிலில், 42 பெட்டிகளில், 2,000 ஆயிரம் டன் நெல் நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பினர். விரைவில் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசியாக வினியோகிக்கப்படும்.
தொழிலாளி உள்பட இரண்டு பேர் மாயம்
ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், தண்ணீர் பந்தல் பாளையம் புதுகாலனியை சேர்ந்தவர் பொன்ராஜ், 55, தொழிலாளி. வேலை தேடி வீட்டை விட்டு வெளியே செல்வதும், சில நாட்களில் வீடு திரும்புவதும் வழக்கம். வழக்கம்போல் கடந்த, 6ம் தேதி வேலை தேட சென்றுள்ளார். ஆனால் வழக்கம்போல் சில நாட்களில் வீடு திரும்பவில்லை. பொன்ராஜ் மகன் செல்வகுமார் புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் மீது ஊழியர் எஸ்.பி.,யிடம் புகார்
ஈரோடு: ஈரோடு, பழையபாளையம், சுத்தானந்தம் நகர் முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன், 61; எஸ்.பி., ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தி.மு.க.,வில் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜாவிடம், 1996 முதல் 2008 வரை பணியாற்றினேன். அவருக்கு சொந்தமான கட்டட மேற்பார்வை பணியையும் மேற்கொண்டேன். இதுவரை எனக்கு சம்பள தொகை வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்தார். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஏற்கனவே சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்துள்ளதாக முருகன் தெரிவித்தார்.
'டிரக் ஆப்'பில் 264 புகார்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மது, போதை பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (டிரக் பிரி டிஎன்) என்ற மொபைல் ஆப் கடந்த பிப்.,18ல் அறிமுகம் செய்யப்பட்டது. https://admin.drugfree-tn.com இணையதளம் மூலம் இதற்கு தீர்வு மேற்கொள்ளப்படுகிறது. இச்செயலி மூலம் இதுவரை மாவட்டத்தில், 264 புகார் பதிவு செய்யப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் புகார் தெரிவிக்கும் நபர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். புகார் மீதான நடவடிக்கை பற்றி வெளிப்படையாக தெரிந்து கொள்ள இயலும் என்றும், போலீசார் தெரிவித்தனர்.
மாநகராட்சியில் 'மாஸ் கிளீனிங்'
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி வார்டுகளில், செவ்வாய், வெள்ளிகிழமையில் மாஸ் கிளினீங் பணி நடக்கிறது. இதன்படி நேற்று, 4, 21, 33, 57வது வார்டு என மண்டலத்துக்கு தலா ஒரு வார்டுகளில் துாய்மை பணி நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர் ஈடுபட்டனர். பணிகளை மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் பார்வையிட்டனர். மாஸ் கிளினீங்கில், 40 டன் கழிவு அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டுறவு பணியாளர் குறைதீர் கூட்டம்
ஈரோடு: ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் கீழ் உள்ள கூட்டுறவு சங்க பணியாளர், ஓய்வு பெற்றோருக்கான குறைதீர் கூட்டம் வரும், 14ம் தேதி காலை, 10:00 மணிக்கு, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. மண்டல இணை பதிவாளர் மற்றும் கூடுதல் பதிவாளர் தலைமை வகித்து, குறைகளுக்கு தீர்வு காண உள்ளனர்.
கள் இயக்கம் ஆலோசனை
ஈரோடு: தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் இல.கதிரேசன், இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன், நைனாமலை உட்பட பலர் பேசினர்.கள்ளுக்கான தடையை நீக்க கோரியும், 2026 சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி வாக்காளர்களை பயிற்றுவிக்கும் நோக்கிலும், அரசியல் கட்சிகள் கவனத்தை ஈர்க்கவும், திருச்சியில் ஏப்.,21ல் அசுவமேத யாகம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.