/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மேட்டூர் அணை டெல்டா பாசன நீர் முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு மேட்டூர் அணை டெல்டா பாசன நீர் முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு
மேட்டூர் அணை டெல்டா பாசன நீர் முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு
மேட்டூர் அணை டெல்டா பாசன நீர் முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு
மேட்டூர் அணை டெல்டா பாசன நீர் முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு
ADDED : ஜூன் 11, 2025 01:40 AM
மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 7ம் முறையாக முதல்வர், தண்ணீரை நாளை திறந்து வைக்க உள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., ஆண்டுதோறும் டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து ஜூன், 12ல் நீர்திறக்கப்படும். அதற்கு நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருக்க வேண்டும். பாசன நீர் மூலம், 12 டெல்டா மாவட்டங்களில், 17.10 ஏக்கரில் குறுவை, சம்பா பயிர்கள் பாசன வசதி பெறும்.
வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன், 12ல் பாசனத்துக்கு, சேலம் கலெக்டர் அல்லது அப்போது பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் நீர் திறப்பர். ஆனால், 2018 முதல், அந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த, இ.பி.எஸ்.,சின் சொந்த ஊர் சேலம் மாவட்டம். அவரது நிலங்கள் கூட, அணை நீர் மூலம் பாசன வசதி பெறுகிறது. இதனால், 2018 ஜூலை, 19; 2019 ஆக., 13; 2020 ஜூன், 12 என, 3 முறை மேட்டூர் அணைக்கு வந்து, டெல்டா பாசன நீரை திறந்து வைத்தார். கடந்த, 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் முதல்வரானார். அவரும், இ.பி.எஸ்., போன்றே, 2021 ஜூன், 12; 2022ல் சற்று முன்னதாக மே, 24; 2023 ஜூன், 12 என, 3 முறை பாசன நீரை திறந்து வைத்தார்.
இ.பி.எஸ்., - ஸ்டாலின் தலா, 3 முறை டெல்டா பாசன நீரை திறந்து வைத்துள்ளனர். 2024ல் அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால், குறித்தபடி ஜூன், 12ல் பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை. ஜூலையில் நீர்வரத்து அதிகரிக்க, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, ஜூலை, 28ல் டெல்டா பாசன நீரை திறந்து வைத்தார்.
நடப்பாண்டு நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை கைகொடுத்து, மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணை நீர்மட்டம், 114.40 அடி, நீர்இருப்பு, 84.82 டி.எம்.சி.,யாக இருந்தது. இதனால் நாளை, முதல்வர் ஸ்டாலின் டெல்டா பாசன நீரை திறந்து வைக்கிறார். குறித்த நேரத்தில் பாசனத்துக்கு நீர் திறப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு ஆயத்த பணியை தொடங்கியுள்ளனர். அதற்கேற்ப நீர்வளத்துறை சார்பில் கால்வாய், வாய்க்கால் துார்வாரும் பணிகள், டெல்டா மாவட்டங்களில் முடிக்கப்பட்டுள்ளன.