ADDED : ஜன 03, 2024 11:44 AM
ஈரோடு: ஈரோட்டில் மரம் ஏறும் தொழிலாளியின் வீடு, டெய்லர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து விட்டன.
ஈரோடு, வீரப்பன் சத்திரம், சி.என். கல்லூரி அருகே, கோவிந்தராஜன் தோட்டத்தை சேர்ந்தவர் சேகர், 54, இவர் மனைவி குமாரி. இவர்களின் மகன் சவுந்தர்ராஜன். சாயப்பட்டறை தொழிலாளி. ஓலை குடிசையில் வசித்து வருகின்றனர். நேற்று காலை, 6:10 மணியளவில் தந்தை, மகன் வேலைக்கு சென்று விட்டனர். 6:15 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு குமாரியும் வெளியே சென்று விட்டார். 6:40 மணிக்கு வந்து பார்த்த போது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
அவர் தகவலின்படி சென்ற தீயணைப்பு துறையினர், 15 நிமிடம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். ஆனாலும், டி.வி., ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. சமச்சீரற்ற மின் வினியோகமே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
*ஈரோடு, கருங்கல்பாளையம், திருநகர் காலனியை சேர்ந்தவர் மேத்யூஸ். 47; கிருஷ்ணம்பாளையம் சாலையில் மேத்யூஸ் டிரஸ் மேக்கர்ஸ் பெயரில் தையல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை கடையில் இருந்து புகை வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற ஈரோடு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும், 3 தையல் மிஷின், தைத்து வைக்கப்பட்டிருந்த துணிகள், தைக்காத துணிகள் என பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து விட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.