ADDED : ஜூன் 04, 2024 04:05 AM
ஈரோட்டில் பஸ் மோதி
ஓய்வு ஹெச்.எம்., பலி
ஈரோடு: ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு நேற்று மாலை, எஸ்.எம்.பி.எஸ்., தனியார் பஸ் சென்றது. பழையபாளையம் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே முன்னால் சென்ற ஆக்டிவா மொபட் மீது பஸ் மோதியது. இதில் மொபட்டை ஓட்டிச் சென்ற திண்டல், வீரப்பம்பாளையத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுந்தரம், 75, தடுமாறி விழுந்தார். அப்போது பஸ்சின் இடதுபுற சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. பஸ் டிரைவரான நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையம், சுள்ளிகரை தோட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், 31, மீது, டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாநகரில்
கொட்டிய கனமழை
ஈரோடு-
ஈரோட்டில் கனமழையால், மாநகர சாலைகளில், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு மாநகரில் நேற்று காலை முதலே கருமேகம் சூழ்ந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 5:50 மணியளவில் கனமழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை, பின் சாரல் மழையாக பொழிந்தது. கொட்டிய மழையால் பஸ் ஸ்டாண்ட், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, முனிசிபல் காலனி, நாராயணவலசு, மாணிக்கம்பாளையம், பன்னீர்செல்வம் பூங்கா, கொல்லம்பாளையம், மூலப்பாளையம், சோலார், ரங்கம்பாளையம் பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து சென்றது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.
விபத்தில் மனைவி பலி
கணவன் பலத்த காயம்
பெருந்துறை, ஜூன் 4-
திருப்பூர், சேரன் நகர் கோவில் வீதியை சேர்ந்தவர் தங்கவேல், 67; திருப்பூரில் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்கிறார். இவர் மனைவி பவளக்கொடி, 65; திருப்பூரில் இருந்து பெருந்துறை வழியாக கவுந்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு, தம்பதியர் ஸ்கூட்டியில் நேற்று சென்றனர். பெருந்துறை, சரளை அருகில் வந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்தில் பவளக்கொடி இறந்தார். பலத்த காயமடைந்த தங்கவேல், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டூவீலர் மீது லாரி மோதி
2 மாணவர்கள் பலி
தாராபுரம்: தாராபுரம் அருகே லாரி மோதியதில், பைக்கில் சென்ற இரு மாணவர்கள் பலியாகினர்.
தாராபுரத்தை அடுத்த டி.காளிபாளையத்தை சேர்ந்த முருகன் மகன் தமிழரசன், 18; நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் கவுதம், 18; இருவரும் தாராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் மெஷினிஸ்ட் பிரிவில் முதலாமாண்டு படித்தனர். இருவரும் பல்சர்-200 சி.சி.,பைக்கில், தாராபுரம்-கரூர் ரோட்டில், கொளத்துப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், நேற்று மாலை, 5:௦௦ மணியளவில்
சென்றனர்.
அப்போது எதிரே உடுமலையை சேர்ந்த ராஜகோபால் ஓட்டி வந்த லாரி, பைக் மீது மோதியது. துாக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்தில் கவுதம் பலியானார். உயிருக்கு போராடிய தமிழரசன், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளர் துறை ஆய்வில்
29 நிறுவனம் மீது நடவடிக்கை
ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், மாவட்ட தொழிலாளர் துறை துணை, உதவி ஆய்வர்கள் கடந்த மாதம் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தில், 20 கடைகளில் முரண்பாடு; எடையளவு சட்ட (பொட்டல பொருட்கள்) விதிகளில், மூன்று கடைகளில் முரண்பாடு கண்டறிந்தனர். ஓட்டல், ரெஸ்டாரன்ட், தொழில் நிறுவனங்களில், 6 இடங்களில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்காதது தெரியவந்தது. இந்த, ௨௬ நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இடி விழுந்து
தண்ணீர் தொட்டி சேதம்
காங்கேயம்: வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி சேர்வகாரன்பாளையம், ஆதிதிராவிடர் காலனி பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது இடி விழுந்து சேதமானது. இதனால் அப்பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.