Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'வெப் கேமரா' கண்காணிப்புடன் 'கவுன்டிங்'

'வெப் கேமரா' கண்காணிப்புடன் 'கவுன்டிங்'

'வெப் கேமரா' கண்காணிப்புடன் 'கவுன்டிங்'

'வெப் கேமரா' கண்காணிப்புடன் 'கவுன்டிங்'

ADDED : ஜூன் 05, 2024 05:08 AM


Google News
ஈரோடு : ஓட்டு எண்ணிக்கை நடந்த அனைத்து மேஜைகளிலும், 'வெப் கேமரா' கண்காணிப்பு வசதி செய்திருந்தனர்.

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதிக்கும் தனித்தனி அறையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா, 14 மேஜைகள் வீதம், 6 தொகுதிக்கும், 84 மேஜைகள் போடப்பட்டு, மின்னணு ஓட்டுப்பதிவுகள் எண்ணப்பட்டன. அதுபோல தபால் ஓட்டு எண்ணும் அறையில், 9 மேஜைகள் அமைத்திருந்தனர். அனைத்து மேஜைகளிலும் 'வெப் கேமரா' அமைத்து, முழுமையாக பதிவு செய்தனர்.

அத்துடன் ஓட்டு எண்ணும் ஒவ்வொரு அறையிலும், தலா, 2 வீடியோ கேமராக்கள் அமைத்து, முழு அளவில் பதிவு செய்தனர்.மேலும், ஓட்டு எண்ணும் அறையின் நுழைவு பகுதி, அறிவிப்பு பகுதி, முகவர்கள் அமர்ந்திருந்த பகுதி, வாகன நிறுத்தம், போலீஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வந்து செல்லும் பகுதியிலும் 'வெப் கேமரா' அமைத்து கண்காணித்தனர்.

மேலும், 6 சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணும், 14 மேஜையில், முதல் மேஜை மட்டும் முற்றிலும் இரும்பு கம்பி தடுப்பு ஏற்படுத்தி, கூண்டு போல அமைத்திருந்தனர். மற்ற, 13 மேஜைகளும் குறுக்கே தடுப்பு இன்றி அமைத்திருந்தனர்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 'ரேண்டமாக' தலா, 5 ஓட்டுச்சாவடிகளில் பதிவாகி இருந்த வி.வி.பேட் பதிவுகள் (நாம் யாருக்கு ஓட்டுப்பதிவு செய்திருந்தோம் என்பதை அறியும் பதிவு சீட்டு) இறுதியில் எண்ணப்பட்டன. இவ்வாறு 6 தொகுதிக்கும் தலா, 5 வி.வி.பேட் என, 30 வி.வி.பேட்களில் பதிவான ஓட்டு சீட்டுகளை எண்ணினர். வி.வி.பேட் பதிவுகளும், பதிவான ஓட்டுப்பதிவும் ஒன்றாக உள்ளதை உறுதி செய்தனர்.

பாதுகாப்பில் 900 போலீசார்

சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்த ஓட்டு எண்ணும் பணியில், ஒரு டி.எஸ்.பி., அல்லது ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டனர். முக்கிய நுழைவு பகுதி, ஓட்டு எண்ணும் அறை பகுதியில் 'மெட்டல் டிடெக்டர்' மூலம் சோதனை செய்து அனுமதித்தனர்.

ஓட்டு எண்ணும் மையத்துக்குள் நுழையவும், வெளியே வரவும் வெவ்வேறு வழி அமைத்திருந்ததால், அங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை, பட்டாலியன் போலீசார், லோக்கல் போலீஸ், ஊர்காவல் படையினர் என மொத்தமாக, 900 போலீசார் இவ்வளாகத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

ஸ்கேன் செய்து தபால் ஓட்டு ஏற்பு

லோக்சபா தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தினர், பிற மாநிலங்களில் பணி செய்வோர், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டது. இதில், 85 வயதுக்கு மேற்பட்டோர், 2,083 பேர், 760 மாற்றுத்திறனாளிகள் என, 2,843 பேர் தபால் ஓட்டுப்பதிவு செய்தனர்.

இதேபோல் மாவட்ட அளவில், 2,222 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், 10,970 பேரில், 4,268 பேர் தபால் ஓட்டுப்பதிவு செய்தனர். தேர்தல் நாளில் பணி செய்த போலீசார், கலெக்டர் அலுவலக பணியாளர்கள் என, 2,866 பேர் தபால் ஓட்டுப்பதிவு செய்திருந்தனர்.

இவை அனைத்தும், திருச்சியில் ஒருங்கிணைப்பு செய்து, ஈரோடு லோக்சபா தொகுதிக்கான, 7,140 ஓட்டுகள் மட்டும் கொண்டு வரப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நேற்று காலை ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு தபால் ஓட்டுக்கள் ஒவ்வொன்றாக பிரித்து, தகுதியான ஓட்டுக்களை சேகரித்து, தலா, 50 என கட்டினர். ராணுவம் உள்ளிட்ட பணிகளில் உள்ளவர்களின் 'சர்வீஸ்' ஓட்டுகள், கவருக்குள் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன. அவர்களது கவரில் உள்ள 'க்யூ.ஆர்' கோடு ஸ்கேன் செய்து, அவர்களது ஓட்டை உறுதி செய்து ஏற்றனர். துவக்கம் முதலே தபால் ஓட்டில் தி.மு.க., முன்னிலை வகித்தது.

600க்கும் மேற்பட்ட மொபைல் சேகரிப்பு

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, ஓட்டு எண்ணும் மையத்துக்குள், கலெக்டர், தேர்தல் மேற்பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் மட்டுமே மொபைல் போன்களை பயன்படுத்தலாம்.

பிற பணிகளில் ஈடுபடுவோர், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுவோர், போலீஸ், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் என அனைவரும் மொபைல் போன்களை, நுழைவு வாயில், பிரதான கட்டட பொது தகவல் மையம், அந்தந்த சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மைய நுழைவு வாயில் போன்ற இடங்களில் ஒப்படைத்து, ரசீது பெற்று சென்றனர்.

இவ்வாறாக, 600க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், 5 டேப், 7 பவர் பேங்க் உட்பட 700 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us