Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானி அருகே வாலிபர் கொலையில் 4 பேர் கைது

பவானி அருகே வாலிபர் கொலையில் 4 பேர் கைது

பவானி அருகே வாலிபர் கொலையில் 4 பேர் கைது

பவானி அருகே வாலிபர் கொலையில் 4 பேர் கைது

ADDED : ஜன 01, 2024 11:31 AM


Google News
பவானி: பவானியை அடுத்த ஜம்பை அருகே, துருசாம்பாளையத்தை சேர்ந்த செல்வம் மகன் அய்யன்துரை, 30; டிப்ளமோ பட்டதாரி. கட்டட வேலைக்கு சென்று கொண்டிருந்தார். நண்பர்களுடன் கடந்த, 27ம் தேதி, ஜம்பை ஆற்றங்கரை பகுதியில் மது குடித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் நால்வரும் அடித்து கொன்றனர். சடலத்தை ஆற்றங்கரை ஓரத்தில், ஆகாயத்தாமரை சருகுகளை வைத்து மூடி வைத்து விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் மகன் காணாமல் போய் விட்டதாக, பவானி போலீசில் பெற்றோர் தரப்பில் நேற்று முன்தினம் புகார் தரப்பட்டது.

இதை தொடர்ந்து ஜம்பை பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், அய்யன்துரையை அவரது நண்பர்களான, பவானி ராயல் தியேட்டர் வீதி பழனிச்சாமி மகன் வேல்முருகன், 23; கிட்டு மகன் பார்த்திபன், 27; சின்னவடமலைபாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திக், 24; ராமசாமி மகன் முருகன், 35; ஆகியோர் பைக்கில் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. நால்வரையும் போலீசார் நேற்று, ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரித்தபோது, உண்மையை ஒப்புக் கொண்டனர்.

இதையறிந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள், பவானி போலீஸ் ஸ்டேசனை நேற்று மாலை முற்றுகையிட்டனர். அய்யன்துரை சடலத்தை மீட்க, ஜம்பை ஆற்றங்கரை பகுதிக்கு, இரவு 7.30 மணிக்கு பவானி போலீசார் சென்றனர். அப்போது கொலையாளிகளை சம்பவ இடத்துக்கு அழைத்து வருமாறு கூறி, 400க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு, போலீஸ் வாகனத்தை சிறை பிடித்தனர்.

பவானி டி.எஸ்.பி., பேச்சுவார்த்தையில், அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கவே, மறியலை கைவிட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. அய்யன்துரை சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us