/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கீழ்பவானி சீரமைப்புக்கு புது அரசாணை அடுத்த 15 நாட்களுக்கும் தடை நீட்டிப்பு கீழ்பவானி சீரமைப்புக்கு புது அரசாணை அடுத்த 15 நாட்களுக்கும் தடை நீட்டிப்பு
கீழ்பவானி சீரமைப்புக்கு புது அரசாணை அடுத்த 15 நாட்களுக்கும் தடை நீட்டிப்பு
கீழ்பவானி சீரமைப்புக்கு புது அரசாணை அடுத்த 15 நாட்களுக்கும் தடை நீட்டிப்பு
கீழ்பவானி சீரமைப்புக்கு புது அரசாணை அடுத்த 15 நாட்களுக்கும் தடை நீட்டிப்பு
ADDED : ஜூன் 11, 2024 05:41 PM
ஈரோடு: கீழ்பவானி சீரமைப்பு பணிக்கான புதிய அரசாணைக்கு எதிரான வழக்கில், மேலும் இரு வார காலத்துக்கு தடையாணை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரால், ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில், 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 1 லட்சம் ஏக்கர் வரை மறைமுகமாகவும் பாசனம் பெறுகின்றன. இந்த வாய்க்காலில் சீரமைப்பு பணி வெகு காலமாக நடக்காததால், அரசாணை எண்: 276ன்படி, 711 கோடி ரூபாயில் கான்கிரீட் தளம், கரை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த துவங்கினர். இதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பும், ஆதரவும் இருந்ததால், பல இடங்களில் பணிகள் முறையாக நடக்கவில்லை.
முறையாக பணிகள் நடக்காததை எதிர்த்து, விவசாய அமைப்புகள் சார்பில் செங்கோட்டு வேலுமணி உயர்நீதிமன்றத்தில், அமைச்சர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில் அரசாணை, 276ஐ மாற்றி, அரசாணை எண்: 60 என கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்டது. அதில் கிளை, கொப்பு வாய்க்காலில் மட்டும் கான்கிரீட் தளம், கரை அமைப்பது என்றும், பிரதான கால்வாயில் பழைய, பழுதான இடங்களில் மட்டும் கான்கிரீட் மூலம் பலப்படுத்துவது, பிற இடங்களில் மண் மூலம் பலப்படுத்த உத்தரவிட்டப்பட்டது.
இதை எதிர்த்தும், செங்கோட்டு வேலுமணி வழக்கு தொடுத்து, 'பழைய அரசாணையை நிறைவேற்றாமல், புதிதாக அரசாணை, 60ஐ வெளியிட்டது தவறு. இதை நிறைவேற்றக்கூடாது' என நீதிமன்றத்தில் இரண்டாம் வழக்கு தொடுத்தார். அரசாணை, 60ஐ செயல்படுத்த நீதிமன்றம் கடந்த, 10 வரை தடை விதித்தது. நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் உரிய விளக்கங்கள் வழங்குவதில் ஏற்பட்ட குழப்பத்தால், மேலும் இரு வாரங்களுக்கு தடையை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இவ்வழக்கையும், அமைச்சர் முத்துசாமியை இணைத்து போடப்பட்ட வழக்கையும் நீதிமன்றம் ஒன்றாக விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இப்பிரச்னைக்கு இடையே, பல இடங்களில் வாய்க்காலில் சீரமைப்பு பணிக்காக தோண்டியும், பாதி அளவு பணி செய்தும் நிறுத்தியுள்ளனர். ஆக.,15 முதல் கீழ்பவானி பாசன முதல் போகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அவ்வாறான தண்ணீர் திறப்புக்கு முன், சீரமைப்பு பணிகள் முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. பணி முடியாவிட்டால், அணையில் தண்ணீர் இருந்தும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு கேள்விக்குறியாகும் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.