Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'முகாம் நாட்களில் ஜி.எச்.,ல் டாக்டர்கள் இருப்பதில்லை'

'முகாம் நாட்களில் ஜி.எச்.,ல் டாக்டர்கள் இருப்பதில்லை'

'முகாம் நாட்களில் ஜி.எச்.,ல் டாக்டர்கள் இருப்பதில்லை'

'முகாம் நாட்களில் ஜி.எச்.,ல் டாக்டர்கள் இருப்பதில்லை'

ADDED : ஜூன் 14, 2024 01:25 AM


Google News
ஈரோடு, ஈரோடு அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நாளில், டாக்டர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் இருப்பதில்லை எனக்கூறி, மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை தோறும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது. அன்று காலை, 7:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில், முதல் ஒரு மணி நேரம் உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 8:00 மணி முதல், 1:00 மணி வரை கண், எலும்பு மற்றும் எலும்பு முறிவு, காது - மூக்கு - தொண்டை, மனநல மருத்துவர் என, நான்கு பேர் சிகிச்சை அளிப்பர். அந்த நாளில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அல்லது இள அலுவலர் உடனிருந்து ஒருங்கிணைப்பர்.

சமீப காலமாக டாக்டர்கள், துறை அலுவலர் பங்கேற்காததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

நேற்று நடந்த முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) வசந்தராம்குமார், இளநிலை அலுவலர் குழந்தைசாமி உட்பட எந்த அலுவலரும் வரவில்லை. எலும்பு மற்றும் எலும்பு முறிவு டாக்டர் மட்டும் இருந்தார். மற்ற மூன்று டாக்டர்களும் இல்லை. இதனால் சான்று பெற முடியாமலும், சிகிச்சை பெற முடியாமலும் மாற்றுத்திறனாளிகள் திரும்பினர்.

இதை கண்டித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் துரைராஜ் தலைமையில், அரசு மருத்துவமனை வாயிலில் அமர்ந்து, மாற்றுத்திறனாளில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து துரைராஜ் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 36,000 பேர் பதிவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அரசின் சலுகைகள், புதிய அட்டை பெறுதல், மருத்துவ உதவிகள் பெற வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக, ஒவ்வொரு வாரமும், வியாழன் அன்று மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. பிற நாட்களில் மாற்றுத்திறனாளிகள் வந்தால், வியாழன் வரும்படி திரும்ப அனுப்புகின்றனர்.

ஒவ்வொரு வாரமும், 30 பேருக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் வருகின்றனர். ஆனால் டாக்டர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினர் வருவதில்லை. இதுபற்றி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகத்திடம் கூறியதும், 'டாக்டர்களை வரவழைக்கிறேன். முகாம் பகுதிக்கு செல்லுங்கள்' என்றார். அங்கு சென்றால், 'எங்களை மிரட்டுகிறீர்களா' என டாக்டர்கள் திட்டுகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஒவ்வொரு வியாழனிலும் அனைத்து டாக்டர்களும், துறை அலுவலர்களும் முகாமில் பங்கேற்க வேண்டும். டாக்டர்கள் வர முடியாத பட்சத்தில் முன்கூட்டி தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு பதில், கலெக்டர் அலுவலகத்தில் முகாமை நடத்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

மதியம், 2:00 மணிக்கு இளநிலை அலுவலர் குழந்தைசாமி, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம், ''வரும் வாரங்களில் இதுபோன்ற சிரமம் ஏற்படாது.

கலெக்டரிடம் பேசி அடுத்த, 2 வாரங்களில் கலெக்டர் அலுவலகத்திலேயே முகாமை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உறுதியளித்ததால், தர்ணாவை கைவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us