ADDED : ஜூன் 27, 2025 12:49 AM

வேடசந்துார்: வேடசந்துார் அருகே நாயக்கர்கள் கால நடுகற்கள் ரோட்டோரம் புதர் மண்டி கிடந்த நிலையில் தினமலர் செய்தி எதிரொலியாக வரலாற்று துறையினர் ஆய்வு செய்தனர்.
வேடசந்துார்- கரூர் ரோட்டில் கல்வார்பட்டி மெயின் ரோடு பகுதியில் இரு நடு கற்கள் புதர் மண்டி கிடந்தன. ஒரு கல்லில் சிற்றரசர் ஒருவர் பெண் அரசியுடன் நிற்பது போன்றும், வாளை தரையில் ஊன்றிய வாரும், மற்றொரு கல்லில் 2 பேரரசர்கள் நிற்பது போன்றும் சிலைகள் வடிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.இதை தொடர்ந்து கரூர் அரசு கலைக்கல்லுாரி முதுநிலை வரலாற்று ஆய்வுத்துறை (தொன்மை பாதுகாப்பு மன்றம்) இணை பேராசிரியர் டாக்டர் சேவியர், விரிவுரையாளர் ரத்தினகுமார், வரலாற்றுத் துறை மாணவர்கள் மோகன் குமார், பிரகாஷ், முகேஷ் கண்ணா ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
பேராசிரியர் சேவியர் கூறியதாவது; இந்த சிலைகள் 1700 --1850 இடைப்பட்ட காலத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் ஆகும். புடைப்பு சிற்ப வகையை சார்ந்தது. ஒரு கல்லில் இரண்டு அரசர்களின் சிலைகள் உள்ளன. இது அண்ணன் தம்பிகளாக இருக்கலாம். மற்றொரு கல்லில் சிற்றரசர் ஒருவர் தன் அரசியுடன் உள்ளார். சிலைகளை பார்க்கும் போது அவர்கள் கொண்டை வைத்துள்ளதால் இது நாயக்கர்கள் காலம் என்பது தெரிய வருகிறது. நாய் ,கத்தியுடன் காட்சி தருவதால் வேட்டைக்குச் செல்லும் காட்சி உள்ளதாக தெரிகிறது. தொல்லியல் துறைக்கு முறையான தகவலை கொடுத்து சிலைகளை நிறுத்தி பாதுகாக்க உள்ளோம் என்றார்.