ADDED : ஜன 05, 2024 04:28 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சகல ஜீவராசிகளுக்கும் படியளுந்தருளிய லீலை நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக காலை முதல் கோயிலில் சிறப்பு பூஜை,வழிபாடுகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு பத்மகிரிஸ்வரர் அபிராமி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பத்மகிரிஸ்வரர்,அபிராமி அம்மன், வள்ளி தெய்வானையோடு முருகன்,விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனி வாகனங்களில் 4 ரத வீதிகளிலும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது பக்தர்களுக்கு அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது.
மாலையிலும் கோயிலில் சிறப்பு பூஜைகள்,வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* கொடைக்கானல் டிப்போ காளியம்மன் கோயிலில் கால பைரவருக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சொர்ணாபிஷேகம், வடை மாலை சாத்துதல், பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் உள்ள காலபைரவர் கோயிலிலும் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
*ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.