Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சுகாதாரமா... அப்படின்னா... கோம்பைபட்டி ஊராட்சியில் அவலம்

சுகாதாரமா... அப்படின்னா... கோம்பைபட்டி ஊராட்சியில் அவலம்

சுகாதாரமா... அப்படின்னா... கோம்பைபட்டி ஊராட்சியில் அவலம்

சுகாதாரமா... அப்படின்னா... கோம்பைபட்டி ஊராட்சியில் அவலம்

ADDED : ஜன 06, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
வத்தலக்குண்டு: சாக்கடை இல்லாததால் அனைத்து ஊர்களிலும் தெருக்களில் கழிவு நீர் ஓடி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் நிலையில், சுகாதாரமா... அப்படின்னா... என கேள்வி கேட்கும் நிலையில் கோம்பைபட்டி ஊராட்சி மக்கள் உள்ளனர்.

கோம்பைப்பட்டி, குளிப்பட்டி, குரும்பபட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, நரசிம்மன் காலனி, கீழகோவில்பட்டி, மேலகோவில்பட்டி, அம்பேத்கர் நகர், இந்திரா நகர், ரெட்டியபட்டி, சின்னுபட்டி, மலையப்பன்பட்டி, ராஜாநகர், கண்ணன் நகர் உள்ளிட்ட கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில் போதி வடிகால், சாக்கடை வசதி இல்லை.

ராஜா நகர், கண்ணன் நகர், மலையப்பன் பட்டி கிராம தெருக்களிலே கழிவு நீர் ஓடி சுகாதாரக் கேடு ஏற்படுத்துகிறது. ரெட்டி பெட்டியில் அமைந்துள்ள ஊராட்சி அலுவலகம் எதிரே கழிவு நீரோடு மழை நீர் சேர்ந்து தேங்கி உள்ளது. இதனைக் கூட ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. குப்பை மேலாண்மையையும் சரியாக கடைபிடிக்காததால் ஊருக்கு ஒதுக்குப்புறம் ஆங்காங்கே குவிக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் சுகாதாரமற்ற நிலையில் ஊராட்சி உள்ளதால் இங்குள்ள மக்கள் பரிதவிக்கின்றனர்.

புதர் மண்டி உள்ளது


எம்.முருகவேல், ராஜா நகர்: ராஜா நகரில் இரு தெருக்களை தவிர மற்ற தெருக்களில் சிமென்ட் தளம் அமைக்கவில்லை. சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் உசிலம்பட்டி ரோட்டில் சாக்கடை நீர் ஓடி ரோடு சேதம் அடைகிறது. கிழக்கு தெருவில் மேடான பகுதியிலிருந்து பள்ளமான இடத்தில் வந்து கழிவு நீர் தேங்கி நிற்கிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் சாக்கடை வசதி செய்து தரவில்லை. நிழற் குடையும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் புதர் மண்டி உள்ளது.

சிரமப்படுகிறோம்


சீனிவாசன், விவசாயி, கோம்பைபட்டி: இங்குள்ள இரண்டு மேல்நிலைத் தொட்டிகளில் பழுதடைந்த ஒரு தொட்டி இடிக்கப்பட்டது. ஒரு ஆண்டுபின் தற்போது தான் தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தி உள்ளனர். விரைவில் குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய வேண்டும்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு கட்டட வசதி இல்லாமல் சிரமப்படுகிறோம். அதற்கு உண்டான இடமும் எங்கள் கிராமத்தில் உள்ளது. சமுதாயக்கூடம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

சேதமான அறையில் ரேஷன்


தங்கப்பாண்டி, எலக்ட்ரீசியன், மேல கோவில்பட்டி: இந்திரா நகர் அம்பேத்கர் நகரில் இரு தெருவை தவிர மற்ற தெருக்களில் சிமென்ட் தளமோ, பேவர் பிளாக்கோ அமைக்கப்படவில்லை. தெருக்களில் கழிவு நீர் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் சுகாதாரம் கேள்வி குறியாக உள்ளது.

அடிப்படை வசதிகளை கூட செய்து தர ஊராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. ரேஷன் கடை பழுதடைந்த மேல்நிலைத் தொட்டி மோட்டார் அறையில் செயல்படுவதால் ஆபத்தான நிலையில் உள்ளது. பெண்களுக்கு சுகாதார வளாகம் இல்லாததால் வெளியிடங்களில் அசுத்தம் செய்து வருகின்றனர்.

ரூ.1.25 கோடிக்கு பணிகள்


சூசைரெஜிரகு, ஒன்றிய கவுன்சிலர், மேலகோவில்பட்டி: ஒன்றிய கவுன்சில் நிதியிலிருந்து ரூ. 1.25 கோடிக்கு திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. தார் ரோடு, சிமென்ட் தளம், மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் என ஊராட்சிக்கு தேவையான பணிகளை செய்துள்ளோம். அடுத்தடுத்து தெருக்களில் பேவர் பிளாக் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வெங்கடாஸ்திரிகோட்டை, மேல கோவில்பட்டியில் ரேஷன் கடைக்கு கட்டடம் அவசியமாகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us