ADDED : மே 11, 2025 05:03 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டையில் இணைப்புச் சாலை அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மறியல் நடந்தது.
ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், லெக்கையன் கோட்டை செம்மடைப்பட்டி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக லெக்கையன்கோட்டையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் லெக்கையன்கோட்டை, அரங்கநாதபுரம் கிராமங்கள் உள்ளன. 650 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். பாலத்தின் மறுபுறம் உள்ள அரங்கநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. படிப்பதற்கு சிறு குழந்தைகள் பாலத்தை கடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் பஸ்சில் செல்வதற்கும், தோட்ட வேலைகளுக்கு செல்வதற்கும் பாலத்தை கடந்து செல்ல வேண்டும். ஊரின் அருகிலே பாலத்தை கடக்க இணைப்பு சாலை அமைக்கவில்லை. இதனால் அரை கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் இணைப்பு சாலை அமைக்க வலியுறுத்தியும் நிறைவேற்றப்படாமல் பாலம் அமைக்கும் பணிகள் நடந்தது. ஆத்திரமடைந்த மக்கள் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மறியல் செய்தனர். வருவாய்த் துறையினர் ,போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. 45 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்க வெளியூர் பயணிகள் சிரமப்பட்டனர். பொதுமக்கள் கூறுகையில், 'இணைப்பு சாலை அமைத்து தராவிட்டால் பாலப் பணிகளை நடக்க விடமாட்டோம் 'என்றனர்.