Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆக்கிரமிப்பால் வறண்டுபோன பண்ணியாமலை கல்லுகுளம்

ஆக்கிரமிப்பால் வறண்டுபோன பண்ணியாமலை கல்லுகுளம்

ஆக்கிரமிப்பால் வறண்டுபோன பண்ணியாமலை கல்லுகுளம்

ஆக்கிரமிப்பால் வறண்டுபோன பண்ணியாமலை கல்லுகுளம்

ADDED : ஜூன் 14, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நத்தம்:போதுமான மழைப்பொழிவு இருந்தும் நீர்வழி வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு, பராமரிப்பு இல்லாததால் சீமை கருவேல மரங்களுடன் பண்ணியாமலை கல்லுகுளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

நத்தம் ஒன்றியம் அவிச்சிப்பட்டி ஊராட்சி பண்ணியாமலையில் உள்ளது கல்லுகுளம். 5 ஏக்கரில் உள்ள இந்த குளம் கரந்தமலை, மிதுகமலை பகுதிகளில் இருந்து வரும் நீரோடை தண்ணீர் மூலமாக நிறையும். இதனால் குளத்தை சுற்றி பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், விவசாயக் கிணறுகள், போர்வெல்கள் நீராதாரமாக கல்லு குளம் விளங்குகிறது. எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் இந்த குளம் பராமரிப்பு இல்லாததால் தற்போது வறண்டு காணப்படுகிறது.

கல்லுகுளத்திற்கு வரும் நீர் வழி வாய்க்கால்கள் துார்வாரப்படாமல் உள்ளது. குளத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழை, கோடை மழை என நத்தம் பகுதியில் போதுமான மழைப்பொழிவு இருந்தும் நீரோடைகள் ஆக்கிரமிப்பு, துார்வாராததால் மழைக்காலங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும் கல்லுகுளம் வறண்டுதண்ணீர் இன்றி உள்ளது. இதனால் குளத்து நீரை ஆதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பாலைவனம் போல் காட்சி


எஸ்.செல்வம், ஓ.பி. எஸ். அணி ஒன்றிய செயலாளர், பண்ணியாமலை: மழைக்காலம் மட்டும் இன்றி கோடை காலத்திலும் கல்லுகுளம் தண்ணீர் நிறைந்து இருக்கும். இதனால் சுற்று பகுதி விவசாய நிலங்களில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. தற்போது போதுமான பராமரிப்பு, அரசு பொதுப்பணித்துறை கண்காணிப்பு இல்லாததால் குளத்தின் பெரும்பகுதி, நீரோடைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இதனால் நல்ல மழை பெய்தும் குளம் தண்ணீர் இன்றி பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் ஆவிச்சிபட்டி, சிறுகுடி, குட்டுப்பட்டி ஊராட்சி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது.

வாழ்வாதாரத்துக்கு வழி காணுங்க


பூமி அம்பலம், விவசாயி, நத்தம் : நத்தம் பகுதியில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோர் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். இந்த பகுதியில் அணைகள் ,பெரிய ஆறுகள் இல்லாததால் கரந்த மலையில் இருந்து வரும் நீர் மூலம் நிரம்பும் குளம் தண்ணீர் ஆதாரத்தை நம்பியே விவசாயம் உள்ளது. நத்தம் பகுதியில் மழை இல்லாத காலத்தில் கூட கல்லு குளத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும். தற்போது குளத்தில் பராமரிப்பு இல்லாததால் குளம் வறண்டு காணப்படுகிறது.ஊராட்சி நிர்வாகம் 100 வேலை திட்ட பணியாளர்களை கொண்டாவது குளத்திற்கு வரும் நீர் வழி வாய்க்கால்களை சுத்தம் செய்து தண்ணீர் வர ஏற்பாடு செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

கவலை அடைய செய்கிறது


எஸ்.ராமேஸ்வரி, விவசாயி, பண்ணியாமலை: கல்லு குளத்தின் கரையில் தான் எங்களின் விவசாய நிலங்கள் உள்ளது. எங்கள் குடும்பம் பாரம்பரியமாக விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது. குளத்தில் தண்ணீர் இருந்ததால் நெல் உள்ளிட்ட பல்வேறு காய்கறி விவசாயங்களை செய்து வந்தோம்.நத்தம் பகுதியில் குறிப்பாக கரந்தமலை பகுதியில் மழை பெய்ததால் ஆறுகள் நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் கல்லுக்குளம் தண்ணீர் இன்றி விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. அரசு,பொதுப் பணித்துறை குளங்களை பராமரித்து தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயத்தை காக்க முடியும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us