Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அக்ரி ஸ்டேக் திட்டத்தில் 70 சதவீதமே பதிவு ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு

அக்ரி ஸ்டேக் திட்டத்தில் 70 சதவீதமே பதிவு ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு

அக்ரி ஸ்டேக் திட்டத்தில் 70 சதவீதமே பதிவு ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு

அக்ரி ஸ்டேக் திட்டத்தில் 70 சதவீதமே பதிவு ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு

ADDED : மே 30, 2025 12:51 AM


Google News
திண்டுக்கல்,:'அக்ரி ஸ்டேக்' திட்டத்தில் பதிவுகள் தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்கள் மட்டுமே 70 சதவீதத்தை தாண்டியுள்ளன. இதனால் ஜூன் 15 வரை பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் விவசாயிகள் தொடர்பான அனைத்து தரவுகளையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும் 'அக்ரி ஸ்டேக்' திட்டத்தின்படி ஆதார் போல் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு தனி குறியீட்டு எண் வழங்கப்படும்.

விவசாயிக்கு சொந்தமான நிலம், அவர் பயன்படுத்திய அரசு திட்டங்கள் உள்ளிட்ட விபரங்கள் ஒரே இடத்தில் சேமிக்கப்படும். நிமிட நேரத்தில் இந்த தகவல்களை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்யலாம். அதற்கான பதிவு நடந்து வருகிறது. பணிகளை வேளாண்மை, தோட்டக்கலை, மக்கள் நலப் பணியாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து வட்டாரங்கள், பொது சேவை மையங்கள் அந்தந்த ஊராட்சி அலுவலகங்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தற்போது வரை அதற்கான பதிவு நடைமுறைகள் தொடர்கின்றன.

இருப்பினும் நிலம் வைத்திருப்பவர்கள் பதிவுக்கு சுணக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திருப்பூர், ராணிபேட்டை, கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பத்துார், பெரம்பலுார் என 10 மாவட்டங்களில் மட்டுமே 70 சதவீத்திற்கு மேல் அக்ரி ஸ்டேக்கில் பதிவாகியுள்ளது. பல மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கும் கீழ் தான் பதிவு நடந்துள்ளது . குறிப்பாக ராமநாதபுரம் 51 , கடலுார் 55, சிவகங்கை 56, புதுக்கோட்டை 56, தஞ்சாவூர் 57 சதவீதமும், விருதுநகர், துாத்துக்குடி, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 59 சதவீதமும் பதிவுகள் நடந்துள்ளன.

வேளாண்துறையினர் கூறியதாவது : 'அக்ரி ஸ்டேக்' திட்டப்பணிகளை ஜூன் 15 ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவேற்ற பணிகள் முடிந்துவிட்டால் விவசாயம் சார்ந்த மானியத் திட்டங்கள், சேவைகளை, இந்த தனித்துவமான அடையாள எண் மூலமாக மட்டுமே பெற முடியும். ஆனால், விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். விவசாயிகள் ஒத்துழைப்பு அளித்தால் தான் வரும் ஆண்டிற்கான திட்டங்கள், சேவைகள் போன்றவற்றை பெற முடியும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us