/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாரியம்மனின் கருணையோ கருணை ...மெய் சிலிர்க்கும் பக்தர்கள்மாரியம்மனின் கருணையோ கருணை ...மெய் சிலிர்க்கும் பக்தர்கள்
மாரியம்மனின் கருணையோ கருணை ...மெய் சிலிர்க்கும் பக்தர்கள்
மாரியம்மனின் கருணையோ கருணை ...மெய் சிலிர்க்கும் பக்தர்கள்
மாரியம்மனின் கருணையோ கருணை ...மெய் சிலிர்க்கும் பக்தர்கள்

திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட பெருமையை உலக அளவில் நிலைநிறுத்துவது கோட்டை மாரியம்மன் கோயிலும், மலைக்கோட்டையும்தான் . தமிழகத்தில் மற்ற எந்த கோயிலுக்கும் இல்லாத சிறப்பம்சமாக மூலவர் மாரியம்மன் சிலையானது பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்துள்ளதால் மண் காக்கும் மாரியம்மன் என பக்தர்கள் பெருமைப்படவே கூறி வணங்குகின்றனர். இதை மெய்பிக்கும் வகையில் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீபத்திய அறிக்கையில் இந்தியாவின் துாய்மையான சுவாச காற்று வீசுவதின் தரக்குறியீட்டில் முதலிடமாக மாவட்டத்தை அறிவித்தபோது கோட்டை மாரியம்மனின் புகழ் வானுயர உயர்ந்துள்ளது. அம்மன் சன்னிதியை யொட்டி விநாயகர் ,முருகபெருமான், மதுரை வீரன்சாமி ,நவக்கிரகங்கள், முனீஸ்வரர் , கருப்பணசுவாமி சன்னிதி , காளியம்மன், துர்க்கை அம்மன், நந்தி சிலை அவதாரங்களின் ஒருங்கிணைப்பே கோட்டை மாரியம்மன் கோயிலின் ஒட்டுமொத்த வடிவமைப்பாகும். மாசி பெருவிழாவின்போது கோட்டை மாரியம்மன் சிம்ம வாகனம், ஜெப வாகனம், குதிரை வாகனங்களில் ஊரை வலம் வருவதால் அம்மை நோய், உடல் உறுப்பு குறைபாடுகள் நீங்குவதாக பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர்.
மாசிவிழாவில் மாவிளக்கு
மகாலெட்சுமி, குடும்பத் தலைவி, திண்டுக்கல்: மாவிளக்கு வழிபாடை எங்களின் தலைமுறை வேண்டுதலாக கடைபிடித்து வருகிறோம். வாசலை நோக்கி கால்களும், அம்மன் மூலஸ்தானத்தை நோக்கி தலையுமாக குடும்பத்தினர்களை படுக்க வைத்து கண், கைகள், வயிறு உட்பட உடல் பாகங்களில் மாவிளக்கு எரிய செய்து நேர்த்தி கடன் நிறைவேற்றுவதில் மனநிறைவு அடைகிறோம். மாவிளக்கு வேண்டுதல் நிறைவேறாமல் போகாது என்பதுதான் இந்த கோயிலின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
அதிசயிக்க வைத்த குழந்தை
காந்திராஜ், ஓட்டல் தொழிலாளி, திண்டுக்கல்: குழந்தை வரத்திற்காக கரும்பு தொட்டில் சுமக்க வேண்டுதல் வைத்து குடும்பத்துடன் கோயிலை சுற்றி வருகிறோம். இதில் வியப்பு என்னவென்றால் ஒரு நிமிடம் கூட அடங்காமல் சேட்டை செய்யும் எங்களின் ஒரு வயது மகன் கரும்பு தொட்டிலில் கிடத்தியதும் அடங்கி கிடப்பதில் அம்மனின் அருளை நாங்கள் முழுவதுமாக உணர்கிறோம். தற்போது நாங்கள் சுமப்பது அம்மனுக்கான நேர்த்தி கடனாக தெரியவில்லை. உள்ள பூரிப்பில் அன்னையின் பாதத்தில் புரள்வதுபோல் உணர்கிறோம்.
மாரியம்மன் அருளை உணர்கிறோம்
சித்ரா, குடும்பத் தலைவி, திண்டுக்கல்: எனது சொந்த ஊர் காரைக்குடியாகும். புகுந்த ஊரான திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசி பெருவிழாவிற்கு அங்கிருந்து வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. அந்த அளவிற்கு மாரியம்மனின் அருள் எட்டுத்திக்கும் பரவியுள்ளது. மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து பொங்கல் வழிபாடு செய்வதே எங்கள் குடும்ப பாரம்பரிய நடவடிக்கையாக தொடர்கிறோம். இதனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களை நோய், நொடியிலிருந்து அம்மன் காத்து வழிநடத்துவதாகவே உணர்கிறோம்..
அம்மனை தழுவும் உள்ளுணர்வு
ராஜலெட்சுமி, குடும்பத் தலைவி: மாசி மாத திருவிழாவில் மாரியம்மனுக்கு அங்கபிரதட்சணம் செய்வதை பாக்யமாக கருதுகிறேன். கோயிலை சுற்றி உருளும்போது உடலில் தெரியாத அந்த சிலிர்ப்பானது கோயில் மூலவரிடம் வந்தடையும்போது தென்படுவதை அம்மன் என்மேல் இறங்குவதாகவே உணர முடிகிறது. நேர்த்தி கடனுக்கான வேண்டுதல் இல்லை. எங்க ஊர் மாரியம்மனை கட்டி தழுவும் உணர்வு சம்மந்தப்பட்ட சடங்காகும். இதை உணர்பவர்கள் ஆண்டுதோறும் அங்கபிரதட்சணம் செய்வதை தவிர்க்க மாட்டார்கள்.
அம்மன் அருளால் நோய் நீங்குகிறது
செல்வபிரியா, குடும்பத்தலைவி: தொடர்ந்து 8 நாட்கள் விரதமிருந்து முளைப்பாரி எடுத்து வருவதில் அம்மனின் அருளை ஒட்டுமொத்தமாக மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளோம். ஆண்டுதோறும் கோட்டை மாரியம்மனுக்கு ஊர் சார்பில் எடுக்கப்படும் முளைப்பாரி விழாவில் கடுமையான விரத கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறோம். இதனால் கொடிய நோயான கொரோனாவிலிருந்து கூட விடுபட்டுள்ளோம் என்பது எங்களது பெரும் நம்பிக்கையாகும். அம்மனின் அருள் அகிலத்தையும் காக்கும்.
மாசி மாதம் மகமாயிக்கானது
கலைச்செல்வி, குடும்பத் தலைவி, நத்தம்: குழந்தை வரம் கேட்டு கடந்தாண்டு கோட்டை மாரியம்மன் கோயிலை சுற்றி வலம் வந்து தொட்டில் கட்டும் மரத்தை சுற்றி வந்து வேண்டுதல் வைத்தோம். மாரியம்மன் அருளால் குழந்தை பிறந்து தற்போது வேண்டுதல் நிறைவேற்ற வந்துள்ளோம். வேண்டியவர்க்கு உரிய வரம் தருவதில் கோட்டை மாரியம்மன் அருளை மண்ணின் மைந்தர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். மாசி மாதம் மகாமாயி திருஅவதார மாதமாக பக்தர்களது கொண்டாட்டமாக உள்ளது.