/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குப்பையில் ஜெயலலிதா படம் அ.தி.மு.க.,வினர் கொந்தளிப்பு குப்பையில் ஜெயலலிதா படம் அ.தி.மு.க.,வினர் கொந்தளிப்பு
குப்பையில் ஜெயலலிதா படம் அ.தி.மு.க.,வினர் கொந்தளிப்பு
குப்பையில் ஜெயலலிதா படம் அ.தி.மு.க.,வினர் கொந்தளிப்பு
குப்பையில் ஜெயலலிதா படம் அ.தி.மு.க.,வினர் கொந்தளிப்பு
UPDATED : ஜூன் 30, 2025 07:01 AM
ADDED : ஜூன் 30, 2025 02:50 AM

வேடசந்துார்: வேடசந்துாரில் புதிதாக திறக்கப்பட்ட மின் அலுவலக கட்டடத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் குப்பையில் கிடந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அ.தி.மு.க.,வினர் கொதிப்படைந்து உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரில் பழைய யூனியன் அலுவலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டு, மின் பகிர்மான கோட்ட அலுவலகமாக மாற்றப்பட்டது. இதன் துவக்க விழா, இரு தினங்களுக்கு முன் நடந்தது.
இந்த பழைய யூனியன் அலுவலக கட்டடத்தில் இருந்த போட்டோக்களை, குப்பைத்தொட்டியில் போட்டிருந்தனர்.
அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும் இருந்தது. இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அ.தி.மு.க., வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அறிக்கை:
வேடசந்துாரில் நடந்த மின்வாரிய அலுவலக திறப்புவிழா நிகழ்ச்சியில், தி.மு.க., அரசின் அலட்சிய போக்கால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படங்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளன.
இது அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
முறையற்ற இச்செயலில் ஈடுபட்ட திண்டுக்கல் மின் வாரியம் வருத்தம் தெரிவிப்பதோடு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அ.தி.மு.க., சார்பாக போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மின்வாரிய அதிகாரி கள் கூறுகையில், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்க வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு இல்லை. இருந்த போதிலும் இந்த சம்பவத்திற்காக வருந்துகிறோம்.
'தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயங்க மாட்டோம்' என்றனர்.