/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்களை தடுக்கலாமேபஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்களை தடுக்கலாமே
பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்களை தடுக்கலாமே
பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்களை தடுக்கலாமே
பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்களை தடுக்கலாமே
ADDED : ஜூன் 01, 2025 03:59 AM

திண்டுக்கல் மாவட்டம் அதிக கிராமப் பகுதிகளை கொண்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர் என பலரும் திண்டுக்கல், பழநி உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர் பகுதிகளுக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லுாரிகள் அனைத்துமே நகர் பகுதிகளை ஒட்டியே உள்ளன. இதனால் கிராமப்புறங்களில் இருந்து அதிகளவில் பஸ்களை பயன்படுத்தியே நகர்பகுதிகளுக்கு வருகின்றனர்.
அதே நேரத்தில் அரசு டவுன் பஸ்கள் சமீப காலமாக பல இடங்களில் பழுதாகி விபத்தை சந்தித்து வருகிறது. கண்ணாடி பெயர்ந்தும், மேல் தகரம் உடைந்து மழைநீர் ஒழுகுவது என அடுக்கடுக்காக பிரச்னைகளை பயணிகள் தினமும் சந்தித்து வருகின்றனர்.
ஆனாலும் அரசு டவுன் பஸ்கள் நிலைமை தெரியாமல் பள்ளி மாணவர்கள் வேகமாக ஓடி படியிலும் கம்பியிலும் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். டிரைவர்,கண்டக்டர் கண்டித்தாலும் கேட்பதில்லை. பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் காலை ,மாலை நேரங்களில் இதை கண்காணிக்க வேண்டும்.'படியில் பயணம் நொடியில் மரணம்' என பெரும்பாலான பஸ்களிலும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனாலும், விழிப்புணர்வு இன்றி படிக்கட்டு பயணம் தொடர்கிறது. படிக்கட்டு பயணத்தால் எண்ணற்ற விபத்துகள் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து துறை அதிகாரிகளும் இது குறித்து கண்டுகொள்வதில்லை. நாளை பள்ளிகள் திறப்பதால் ஆரம்பம் முதலே இதனை கண்காணிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை, போலீசார் என இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.இதோடு காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.