Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இணைய வழிக்கு மாறியும் தீராத தொல்லை

இணைய வழிக்கு மாறியும் தீராத தொல்லை

இணைய வழிக்கு மாறியும் தீராத தொல்லை

இணைய வழிக்கு மாறியும் தீராத தொல்லை

ADDED : ஜூலை 30, 2024 06:01 AM


Google News
Latest Tamil News
ஆத்துார் : அரசு துறைகளில் லஞ்சம் தவிர்க்கவும் மக்கள் அலைக்கழிப்பை தவிர்க்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட இ--சேவை முறையின் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான இடைத்தரகர்கள் செயல்பாடுகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

மக்கள் அலைக்கழிப்பை தவிர்க்க அரசு துறை பணிகள் இணைய மயமாக்கப்பட்டு வருகின்றன. வருவாய், பத்திரப்பதிவு, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதி பெறுதல், சான்றுகள், வேலைவாய்ப்பு துறை விண்ணப்ப பணிகள் என ஏராளமான பணிகள் ஆன்லைன் முறையில் நடக்கிறது. அதிகப்படியாக வருவாய் துறை பிரிவு சார்ந்த சான்றுகள் உட்பட 194க்கு மேற்பட்ட சான்றுகளை இ--சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற முடியும்.

இதற்கென ஒவ்வொரு விண்ணப்பத்திற்கு தேவையான தகுதி ஆவணங்கள் இணைப்பிற்கான பட்டியலும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.தாலுகா அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்களில் இதற்கென சேவை மையங்கள் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு வரை ஊராட்சிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சேவை மையங்கள் உருவாக்கப்பட்டது.

கிராம மக்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருந்தது. நகர் மட்டுமின்றி கிராமங்களிலும் கிடைத்த வசதி காரணமாக 3 முதல் 5 கிலோ மீட்டர் துாரம் வரை உள்ள இம்மையங்களின் சேவை கிராம மக்களுக்கு பெரும் வரமாக அமைந்திருந்தன.

ஆட்கள் பற்றாக்குறை, செலவினம், உள்ளூர் அரசியல் செல்வாக்கு போன்ற பிரச்னைகளால் செயற்கையான காரணங்களை கூறி படிப்படியாக முடக்கத் துவங்கினர்.

தற்போது பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்க சேவை மையங்கள் இதன் செயல்பாட்டை நிறுத்தி உள்ளன. சமீபகாலமாக இப்பணிகளில் தனியார் மைய ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இவர்கள் கூடுதல் வசூல், குளறுபடி மட்டுமின்றி முறைகேடு, ஆவணங்களை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட புகார்கள் அதிகரித்துள்ளன. இதற்காக மக்கள் அலைக்கழிப்பு என அவதிப்படுகின்றனர்.

இதுதவிர வருவாய்துறை உட்பட அரசு துறை அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தகுதியான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்த போதும் பிற காரணங்களைக் கூறி விண்ணப்பதாரர்களை நேரில் அலுவலகத்திற்கு வரவழைக்கின்றனர். தொடர்பு இல்லாத காரணங்களைக் கூறி கூடுதல் கவனிப்பிற்கு வலியுறுத்துகின்றனர். முறைகேடுகளை களைய அரசு சட்டங்கள் வகுத்தபோதும் திட்டம் போட்டு வசூல், அலைக்கழிப்பால் மக்களை வதைக்கும் அவலங்கள் தொடர்கின்றன.

இடைத்தரகர்கள் ஆதிக்கம்


அய்யாத்துரை, ஹிந்து முன்னணி, சேடபட்டி: மக்களின் அலைக்கழிப்பு தவிர்க்கவும் லஞ்சத்தை ஒழிக்கவும் அரசு துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் இணையமயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவற்றை முடக்குவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வருவாய்த்துறை சான்று கோரி விண்ணப்பிக்கும் சூழலில் அங்குள்ள தனியார் ஏஜென்ட்களாகவும் இடைத்தரகர்கள் செயல்படுகின்றனர். இவர்களுக்கு அலுவலகத்திலே அதிகாரிகளுக்கு இணையான நாற்காலி, டேபிள், மின்விசிறி உள்ளிட்ட சகல வசதிகளும் வழங்கப்படுகிறது.

தங்களை அலுவலர்களாகவே காட்டி கொள்ளும் இதுபோன்ற இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்ட மனுதாரர்களை தொடர்பு கொண்டு கூடுதல் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களுக்கான இறுதி ஒப்புதல் அளிக்கும் பொறுப்பாளர்களாகவும், கம்ப்யூட்டர் இயக்கும் பகுதியில் நியமிக்கப்படுகின்றனர்.

வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ் உட்பட விண்ணப்பத்திற்கு ஏற்ப கூடுதல் வசூல் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. இணைய வழி சேவை பெயரளவில் செயல்படும் சூழலில் மக்களின் வழக்கமான அலைகழிப்பு, அதிகாரிகளின் லஞ்ச வசூல் குறைந்தபாடில்லை. வருவாய்த்துறை மட்டுமின்றி பதிவுத்துறை, சுகாதாரம், கல்வி, உள்ளாட்சி உள்பட பல்வேறு துறைகளிலும் இது போன்ற இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறையவில்லை.

முடக்கும் அதிகாரிகள்


பொன்ராஜ், சமூக ஆர்வலர், கன்னிவாடி: ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு முன் வேலை உறுதித் திட்ட நிதியின் மூலம் சேவை மையங்களுக்கென பல லட்சம் மதிப்பிலான கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்ட போதும் செயல்பாடின்றி முடக்கி வைத்துள்ளனர். பல சேவை மைய கட்டடங்கள், சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. கூட்டுறவு சேவை மையங்களில் ஆட்கள் இருந்த போதும் பிற பணிகளுக்கு பயன்படுத்துவதால் விண்ணப்ப காரணங்களுக்காக வரும் பயனாளிகளை அலைக்கழிக்கின்றனர். பணியாளர் பற்றாக்குறையை கூறி சரியான நேரத்தில் அலுவலகத்தை திறப்பதில்லை.

பல கூட்டுறவு சேவை மையங்கள் செயலிழந்து வாடிக்கையாளர்களை தனியார் மையங்களுக்கு வற்புறுத்தி அனுப்புகின்றனர். தனியார் மையங்களில் ஆவணங்கள் மூலம் விதிமீறல் நடக்கிறது.

பதிவேற்றத்திற்காக வழங்கப்படும் ஆவணங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் தொடர்கிறது. தகவல் பாதுகாப்பில் பின்னடைவு உள்ளது. இலவச பிறப்பு, இறப்பு சான்று உள்ளிட்ட விண்ணப்பங்களுக்கு 500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர் என்றார்.-- -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us